மு.க.ஸ்டாலின் சுயசரிதை புத்தகம்- ராகுல் காந்தி இன்று வெளியிடுகிறார்

சென்னை:

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பள்ளி-கல்லூரி படிப்பு, இளமை காலம் முதல் அரசியலில் கடந்து வந்த நிகழ்வுகள், பொதுக்கூட்ட பேச்சுகள், திரையுலகில் கால்தடம் பதித்தது, திருமண வாழ்க்கை, மிசா காலத்தில் அனுபவித்த கொடுமைகள் என அவரது 1976-ம் ஆண்டு வரையிலான 23 ஆண்டு கால வாழ்க்கை பயண வரலாற்று சுவட்டை “உங்களின் ஒருவன்” என்ற தலைப்பில் புத்தகமாக சுயசரிதை எழுதியுள்ளார்.

இந்த புத்தகத்தின் முதல் பாகம் வெளியீட்டு விழா சென்னையில் இன்று (திங்கட்கிழமை) மாலை நடைபெறுகிறது.

நந்தம்பாக்கம் வர்த்தக மைய கூட்டரங்கில் மாலை 3.30 மணியளவில் நடைபெறும் இந்த விழாவில் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று “உங்களில் ஒருவன்” புத்தகத்தை வெளியிட்டு சிறப்புரையாற்றுகிறார்.

விழாவில் பங்கேற்பதற்காக ராகுல்காந்தி இன்று பகல் 12 மணியளவில் டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்னை வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.

வரவேற்பை பெற்றுக்கொள்ளும் ராகுல்காந்தி கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார்.

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதிய “உங்களில் ஒருவன்” புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மதியம் 3.15 மணியளவில் ஓட்டலில் இருந்து புறப்பட்டு நந்தம்பாக்கம் வர்த்தக மையம் செல்கிறார்.

அங்கு மு.க.ஸ்டாலின் எழுதிய புத்தகத்தை வெளியிட்டு சிறப்புரையாற்றுகிறார்.

இந்த நிகழ்ச்சிக்கு தி.மு.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் தலைமை தாங்குகிறார். தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலு முன்னிலை வகிக்கிறார். தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. வரவேற்புரை நிகழ்த்துகிறார்.

விழாவில் கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன், ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான உமர்அப்துல்லா, பீகார் மாநில எதிர்க்கட்சி தலைவரும், ராஷ்டீரிய ஜனதா தளத்தைச் சேர்ந்த தேஜஸ்வி யாதவ், கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

விழா இறுதியில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்புரை நிகழ்த்துகிறார்.

இந்த விழாவில் கலந்து கொள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட 1,500-க்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே விழா அரங்கத்துக்குள் செல்ல முடியும். மற்றவர்கள் வெளியில் இருந்தபடிதான் விழா நிகழ்ச்சிகளை காண முடியும்.

கட்சி பிரமுகர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் விழாவை காண்பதற்கு வசதியாக நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்திலும் எல்.இ.டி. அகன்ற திரையில் பார்ப்பதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த விழாவில் ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்பதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்த விழா முடிந்ததும் ராகுல்காந்தி நேராக கிண்டி ஐ.டி.சி. சோழா நட்சத்திர ஓட்டலுக்கு சென்று சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார். பின்னர் அங்கிருந்து மாலை 6.30 மணியளவில் புறப்பட்டு சத்தியமூர்த்தி பவனுக்கு 7 மணிக்கு வருகிறார்.

அங்கு காங்கிரஸ் கட்சி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. சத்திய மூர்த்தி பவனில் கூட்ட அரங்கிற்கு செல்லும் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மத்தியில் சிறப்புரையாற்றுகிறார்.

தமிழ்நாடு முழுவதும் இருந்தும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள். அவர்களுக்கு ராகுல் காந்தி பல்வேறு ஆலோசனைகளை வழங்குகிறார்.

சுமார் 45 நிமிட நேரம் சத்தியமூர்த்தி பவனில் இருக்கும் ராகுல்காந்தி 8 மணியளவில் அங்கிருந்து புறப்படுகிறார். நேராக விமான நிலையம் செல்லும் அவர் 8.30 மணியளவில் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.