சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பட்ஜெட்டில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என்பதை விளக்கினார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
நிர்மலா சீதாராமன் பேசியதன் தொகுப்பு:
யாருக்கும் ரூ.15 லட்சம் தருவதாக பிரதமர் மோடி சொல்லவில்லை. ஒரு Engine-க்கு Lubricant Oil போலத்தான், அரசுக்கு வரிப்பணமும். எங்கு செல்கிறது ? யாருக்கு செல்கிறது? என்பதை விட அதனால் அரசு இயந்திரம் சரியாக செயல்படுகிறதா என்பது தான் முக்கியம். முந்தைய பட்ஜெட்டில் உள்கட்டமைப்புக்கு ஒதுக்கப்பட்ட தொகை முழுமையாக செலவழிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியும் முழுமையாக செலவழிக்கப்பட்டுள்ளதால், இந்த முறை உள்கட்டமைப்புக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
> உக்ரைன் போரால் பெட்ரோல், டீசல் விலை உயர்வு இருக்குமா என்ற கேள்வியை பொறுத்தவரை, அது ஒரு பிரச்சனையாக இருக்கிறது. ஆனால் மக்கள் மீது இந்த சுமை, மக்களைத் தாக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை மத்திய அரசு கவனித்து அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
>கொரோனாவுக்கு முந்தைய வளர்ச்சி ஏன் இப்போது இல்லை என்று பரவலாக கேள்வி எழுப்புகின்றனர். கொரோனா காலத்துக்குப் பின் பொருளாதார வீழ்ச்சி இல்லை. இனியும் வீழாது இந்திய பொருளாதாரம். கொரோனா உள்ளிட்ட பல்வேறு சவால்கள் இருந்தாலும், இந்தியப் பொருளாதாரம் சரியவில்லை.
>2015-ம் ஆண்டு முதல் பெண்களை முன்னிறுத்தியே ஒவ்வொரு திட்டங்களையும் மத்திய அரசு கொண்டு வருகிறது. அனைவருக்கும் எரிவாயு திட்டம், கழிப்பறை திட்டம், மின்சாரம் உள்ளிட்ட அனைத்தும் பெண்களை முன்னிறுத்தியே செயல்படுத்தப்பட்டுள்ளது.
>டிஜிட்டல் பாஸ்போர்ட், டிஜிட்டல் கல்வி, டிஜிட்டல் பல்கலைக்கழகம், டிஜிட்டல் விவசாயம் என்று அனைத்தும் டிஜிட்டலாக்கப்பட்டுள்ளது. அடுத்த 25 ஆண்டுகள் நமக்கு அமிர்த காலம். வரக்கூடிய 25 ஆண்டு முடிவில், பாரதி கண்ட கனவு நனவாகும் வகையில் இந்தியா இருக்க வேண்டும் என்பதற்காக இந்த பட்ஜெட் போடப்பட்டுள்ளது.
>₹7.5 லட்சம் கோடி உள்கட்டமைப்புக்காகவே ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மாநிலங்களுக்கு ₹1 லட்சம் கோடி வட்டியில்லா கடனாக வழங்கப்பட்டுள்ளது.
>2 வருடங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் கல்வி தடைபட்டுள்ளது. மாணவர்களின் கற்றல் இடைவெளியை போக்க என்ன செய்யலாம் என்று யோசித்தோம். இதற்காக தூர்தர்ஷன் மூலம் 200 கல்வித் தொலைக்காட்சிகள் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தாய்மொழியில் கல்வி பயில 200 புதிய தொலைக்காட்சி அலைவரிசைகள் உதவி செய்யும் என அவர் தெரிவித்துள்ளார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM