ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழகம், சத்தீஷ்கர் அணிகளுக்கிடையேயான ஆட்டம் டிராவில் முடிந்தது.
38 அணிகள் பங்கேற்றுள்ள ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. எலைட், ‘ஹெச்’ பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழக அணி தனது இரண்டாவது போட்டியில் சத்தீஷ்கர் அணியை எதிர்த்து விளையாடி வருகிறது.
இதில் முதலில் பேட்டிங் செய்த தமிழக அணியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பாபா அபரரஜித் 166 ரன்களும், பாபா இந்திரஜித் 127 ரன்களும் எடுத்தனர். ஷாருக்கான் தன் பங்கிறகு 69 ரன்கள் சேர்க்க தமிழக அணி தனது முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்பிற்கு 470 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டத்தை டிக்ளேர் செய்தது.
பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய சத்தீஷ்கர் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் சத்தீஷ்கர் அணி 5 விக்கெட்களை இழந்து 105 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில் நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில், நிலைத்து நின்று ஆடிய கேப்டன் ஹர்பிரீத் சிங் சதமடித்து அசத்த, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆட்ட நேர முடிவில் சத்தீஷ்கர் அணி 8 விக்கட்டுகள் இழப்பிற்கு 261 ரன்களை எடுத்திருந்தது.
இதனையடுத்து இன்று நான்காம் நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கேப்டன் ஹர்பிரீத் சிங், 170 ரன்களில் பாபா அபராஜித் பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார். சத்தீஷ்கர் அணி தனது முதல் இன்னிங்ஸில் 304 ரன்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்து பாலோ ஆன் ஆனது.
தமிழக அணி தரப்பில் சாய் கிஷோர் 4 விக்கெட்டுகளையும், அபராஜித் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய சத்தீஷ்கர் அணியில் சஷாங் சிங் 67 ரன்களும், கேப்டன் ஹர்பிரீத் சிங் 43 ரன்களும் எடுத்தனர். கடைசி நாளான இன்று ஆட்ட நேர முடிவில் சத்தீஷ்கர் அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 8 விக்கட்டுகளை இழந்து 172 ரன்களை எடுத்திருந்த நிலையில் ஆட்டம் டிராவில் முடித்துக் கொள்ளப்பட்டது. சித்தார்த், சாய் கிஷோர் தலா 3 விக்கட்டுகளையும், அபராஜித் 2 விக்கட்டுகளையும் வீழ்த்தினர்.
ஆட்ட நாயகன் விருது பாபா அபராஜித்திற்கு வழங்கப்பட்டது. முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் தமிழக அணிக்கு மூன்று புள்ளிகளும், சத்தீஷ்கர் அணிக்கு ஒரு புள்ளியும் வழங்கப்பட்டது. எலைட் ஹெச் பிரிவில் தமிழக அணி இரண்டாமிடம் பிடித்துள்ளது.