வாஷிங்டன்-உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவின் பொருளாதாரத்தை முடக்கும் வகையில், ‘ஸ்விவ்ட்’ எனப்படும், சர்வதேச வங்கி சேவை ஒத்துழைப்பு முறையில் இருந்து ரஷ்ய வங்கிகளை நீக்க, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முடிவு செய்துள்ளன.
11 ஆயிரம் வங்கிகள்’ஸ்விவ்ட்’ எனப்படும் உலகளாவிய வங்கிகள் இடையேயான நிதி தகவல் தொடர்பு சொசைட்டி வாயிலாக, உலகில் உள்ள வங்கிகள் இடையே தகவல்கள் பரிமாறப்படுகின்றன. இதில், 200 நாடுகளைச் சேர்ந்த, 11 ஆயிரம் வங்கிகள் இடம்பெற்றுள்ளன.
இதன் வாயிலாக, ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்கு பரிவர்த்தனையை சுலபமாக மேற்கொள்ள முடியும். ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தை தலைமையிடமாக வைத்து இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளதை அடுத்து, ரஷ்யா மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்டவை பல பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
இந்நிலையில் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, பிரிட்டன், கனடா நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் இணைந்து வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதை ஏற்க முடியாது.
உக்ரைனுக்கு எந்த நிலையிலும் ஆதரவாக இருப்போம்.அபாயம்அந்த வகையில் பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ள ரஷ்ய வங்கிகள் மற்றும் ரஷ்ய மத்திய வங்கிகள், ஸ்விவ்ட் முறையை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது.பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ள ரஷ்ய நிறுவனங்கள் மற்றும் அதன் தலைவர்களுக்கு சொந்தமாக அந்தந்த நாடுகளில் உள்ள சொத்துக்களை முடக்குவதற்கு, ஒரு கூட்டு பணிக் குழுவை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையால், ரஷ்யாவின் வங்கி சேவை கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.இதையடுத்து, ரஷ்யா வில் உள்ள ஏ.டி.எம்., களில் பணம் எடுப்பதற்காக ஏராளமானோர் திரண்டனர்.
Advertisement