நியூயார்க்:உக்ரைன் – ரஷ்யா போர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க, ஐ.நா., பொதுச் சபையின் அவசர சிறப்பு கூட்டத்தை கூட்டுவதற்கான தீர்மானம், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேறியது. அதே நேரத்தில், இந்த விவகாரத்தில் ஒதுங்கியே இருக்க முடிவு செய்துள்ள இந்தியா, இந்த தீர்மானத்தின் மீதான ஓட்டெடுப்பில் பங்கேற்காமல், தீர்மானத்துக்கு ஆதரவாக கையெழுத்திடாமல் தவிர்த்துள்ளது.சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த பின், அண்டை நாடுகளான ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்னை இருந்து வந்தது.
பொருளாதார தடை
இதற்கிடையே வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இடம் பெற்றுள்ள, ‘நேட்டோ’ எனப்படும் ராணுவ ஒத்துழைப்புக்கான அமைப்பில் இணைவதற்கு, உக்ரைன் முயற்சி மேற்கொண்டது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷ்யா, உக்ரைன் எல்லையில் 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள், தளவாடங்களை குவித்து வந்தது. இதையடுத்து, உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதை தவிர்க்கும் வகையில், ரஷ்யாவுடன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பேச்சு நடத்தின. அது தோல்வியடைந்து போர் மூண்டதால், ரஷ்யா மீது அந்நாடுகள் பொருளாதார தடைகளை விதித்தன.இந்நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதை கண்டித்து, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், கடந்த 25ம் தேதி தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த தீர்மானத்துக்கு, 15 உறுப்பினர்கள் உடைய பாதுகாப்பு கவுன்சிலின், 11 உறுப்பு நாடுகள் ஆதரவு தெரிவித்தன. அதே நேரத்தில் இந்தியா, சீனா, யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஓட்டெடுப்பில் பங்கேற்கவில்லை. ரஷ்யா தன்னுடைய, ‘வீட்டோ’ அதிகாரத்தை பயன்படுத்தியது. இதையடுத்து, தீர்மானம் தோல்வி அடைந்தது.
‘வீட்டோ’ அதிகாரம்
இதைத் தொடர்ந்து, உக்ரைன் – ரஷ்யா விவகாரம் தொடர்பாக விவாதிக்க, 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள ஐ.நா., பொதுச் சபையின் அவசர சிறப்பு கூட்டத்தை கூட்டுவதற்கான தீர்மானம், பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று முன்தினம் இரவு தாக்கல் செய்யப்பட்டது.முந்தைய கூட்டத்தை போலவே, இதிலும் இந்தியா, சீனா மற்றும் யு.ஏ.இ., ஓட்டெடுப்பில் பங்கேற்கவில்லை. ரஷ்யா, எதிர்த்து ஓட்டளித்தது. அதே நேரத்தில் அல்பேனியா, பிரேசில், பிரான்ஸ், கபான், கானா, அயர்லாந்து, கென்யா, மெக்சிகோ, நார்வே, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆதரவாக ஓட்டளித்தன.பொதுச் சபையைக் கூட்டுவதற்கான தீர்மானத்தின் மீது, ‘வீட்டோ’ அதிகாரத்தை பயன்படுத்த முடியாது. அதன்படி, 11 உறுப்பினர்கள் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேறியது.
இதைத் தொடர்ந்து, ஐ.நா., பொது சபையின் அவசர சிறப்புக் கூட்டத்தை உடனடியாக கூட்டுவதற்கு, அதன் 76வது அமர்வின் தலைவரான அப்துல்லா ஷாகித் உத்தரவு பிறப்பித்துள்ளார்.கடந்த 1950ல் இருந்து, இவ்வாறு பொதுச் சபையின் அவசர சிறப்பு கூட்டத்தை கூட்டும்படி, பாதுகாப்பு கவுன்சில், 11வது முறையாக அழைப்பு விடுத்துள்ளது. கடந்த, 40 ஆண்டுகளில் இது முதல் முறை.பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேற்றப்படும் தீர்மானம், அனைத்து நாடுகளையும் கட்டுப்படுத்தும். அதே நேரத்தில், பொதுச் சபை கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தால் எந்த நாட்டையும் கட்டுப்படுத்த முடியாது.
ராணுவ உறவு
ரஷ்யாவுடன் இந்தியாவுக்கு, நீண்ட காலமாக ராணுவ உறவு உள்ளது. அதே நேரத்தில், ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் திரண்டுள்ளன. இந்தியா, ரஷ்யாவுக்கு ஆதரவு தெரிவித்தால், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் விரோதத்தை சம்பாதிக்க வேண்டிஇருக்கும். அதே நேரத்தில் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாடு எடுத்தால், அது அந்த நாடுடனான ராணுவ உறவில் பாதிப்பை ஏற்படுத்தி விடும். அதனால், எந்த தரப்புக்கும் ஆதரவு தெரிவிக்காமல், ஒதுங்கியே இருக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படியே, இந்தத் தீர்மானங்கள் மீதான ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் தவிர்த்துள்ளதாக கூறப்படுகிறது.