வாழ்நாள் முழுவதும் மக்களில் ஒருவனாக இருக்க வேண்டுமென்பதே தமது எண்ணம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய உங்களில் ஒருவன் என்ற சுயசரிதை புத்தக வெளியிட்டு விழா சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா, பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர். புத்தகத்தை ராகுல் காந்தி வெளியிட, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய நடிகர் சத்யராஜ், புத்தகம் விறுவிறுப்பாக உள்ளது என்றும் பல இடங்களில் சிரிக்கவும் உணர்ச்சி வசப்படவும் ரசிக்கவும் முடிவதாகவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய, கவிஞர் வைரமுத்து, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திட்டத்தை முதலமைச்சர் செயல்படுத்தி வருவதாகவும், தமிழக அரசின் 9 மாத கால ஆட்சியை இந்தியாவே உற்று நோக்குவதாகவும் தெரிவித்தார்.
கேரளாவும், தமிழகமும் நெருங்கிய உறவு கொண்டுள்ள மாநிலங்கள் என்றும் மலையாளிகளும், தமிழர்களும் ஒரே நிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குறிப்பிட்டார்.
மாநில கூட்டாட்சியை காப்பதில் நாட்டிலேயே மு.க.ஸ்டாலின் முதல் ஆளாக உள்ளதாகவும், மாநில கூட்டாட்சிக்கு எப்போது எல்லாம் ஆபத்து வந்தாலும் அவர் தான் முதலில் குரல் கொடுப்பதாகவும் பினராயி பேசினார்.
நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 3,000 ஆண்டுகளாக தமிழர்கள் மீது யாராலும் எதையும் திணிக்க முடியவில்லை என்றும் தமிழர்களிடம் அன்புடனும், பரிவுடனும் பேசினால் அவர்கள் எதையும் தருவார்கள் என தெரிவித்தார்.
தான் தமிழன் என்று எப்போதும் பெருமையாக சொல்வதாகவும், தமது ரத்தம் தமிழ் மண்ணில் கலந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனை அடுத்து உரையாற்றிய முதலமைச்சர், எந்த சூழலிலும், எந்த பொறுப்பில் இருந்தாலும் உங்களில் ஒருவனாக இருக்க வேண்டும் என்பதே தமது எண்ணமென தெரிவித்தார்.
வாழ்நாள் முழுவதிலும் உங்களின் ஒருவனாக வாழ்வேன் என்றும் தான் ஒரு கொள்கை கூட்டத்தின் முகம் என்றும் அவர் பேசினார். மேலும், திராவிட மாடல் ஆட்சியான சமூகநீதி ஆட்சியை நாடு முழுவதும் எடுத்துச் செல்லும் பணியில் தேசிய கட்சிகள் முன்வர வேண்டும் முதலமைச்சர் அழைப்பு விடுத்தார்.