கமலின் ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு இந்த வாரத்தோடு நிறைவடைகிறது. கமல்ஹாசன்- விஜய்சேதுபதி- பஹத் பாசில்- நரேன் கூட்டணியை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் படம் ‘விக்ரம்’. இது கமலின் 232-வது படம்.
விஜய்சேதுபதியும் பஹத் பாசிலும் அண்ணன்- தம்பி, அரசியல்வாதிகளாகவும் நடிக்கின்றனர். அவர்கள் இருவரிடமும் சிக்கிக் கொண்ட நரேனை ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியான கமல் எப்படி காப்பாற்றுகிறார் என்பதே படத்தின் கதை என்கிறார்கள். கமல் இதில் கண் பார்வையற்றவராக நடிக்கிறார். லோகேஷின் ‘கைதி’ போலவே இதுவும் ஒரே இரவில் நடக்கும் கதை என்றும் சொல்கிறார்கள். படத்தில் சின்னத்திரை நடிகைகள் ஷிவானி நாராயணன், மகேஸ்வரி, மைனா நந்தினி ஆகியோரும் உள்ளனர். இவர்கள் தவிர மற்றொரு நடிகையும் முக்கிய கதாபாத்திரத்தில்நடித்து வருகிறார் என்றும் தகவல். அவரது கதாபாத்திரம் படத்தின் திருப்புமுனை என்றும் சொல்கிறார்கள். ..”
சென்னையில் தொடங்கிய படப்பிடிப்பு, பாண்டிச்சேரி, கோவை, சென்னை என நடந்து வருகிறது. ஈவிபி ஸ்டூடியோவில் நடந்து வரும் ஷெட்யூலோடு அதாவது இந்த வாரத்தோடு மொத்த படப்பிடிப்பும் நிறைவடைகிறது. இடையே கமல் இதில் தயாரிப்பாளர் என்பதாலும், டீமில் அவர் காட்டிய அன்பு அனைவரையும் சிலிர்க்க வைத்ததாலும் கமலை கௌரவிக்க விரும்பினார் லோகேஷ். தவிர கமல் போர்ஷனின் நிறைவு நாளில் இயக்குநர் லோகேஷ், படப்பிடிப்பின் இடையே பிரமாண்ட கேக் வரவைத்து, தன் சந்தோஷத்தை பகிர்ந்துள்ளார்.
இப்போது பேட்ச் ஒர்க் ஷூட் நடந்து வருகிறது. தொடர்ந்து நைட் ஷூட் தான் நடந்து கொண்டிருக்கிறது. விஜய்யின் ‘சர்கார்’ பட ஒளிப்பதிவாளரான கிரிஷ் கங்காதரன், ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அனிருத் இசையில், இப்போது பின்னணி இசை அமைக்கும் வேலைகளும் இன்னொரு பக்கம் பரபரக்கிறது. படத்தின் டீசர் மார்ச் மாத கடைசியில் வெளிவருகிறதாம். கோடை விடுமுறைக்கு படத்தை திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளனர்.