வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருவோருக்கு விசேட அறிவித்தலொன்று வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி முழுமையாக தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்கள் பீ.சி.ஆர் அல்லது என்டிஜன் பரிசோதனைகளை மேற்கோள்ளத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை காலமும் முழுமையாக தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்களும் இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு இரண்டு வாரங்களுக்குள் கோவிட் பரிசோதனை செய்ய வேண்டுமென்ற நடைமுறை காணப்பட்டது.
எனினும், எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் அதாவது நாளை முதல் இந்த நடைமுறையில் மாற்றம் கொண்டுவரப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு தடுப்பூசிகளை ஏற்றிக் கொள்வது பூரண தடுப்பூசி ஏற்றுகையாகவும், 18 வயதுக்கும் குறைந்த சிறார்கள் ஒரு தடுப்பூசி ஏற்றிக் கொள்வது பூரண தடுப்பூசி ஏற்றுகையாகவும் கருதப்படுகின்றது.
மேலும் ஆறு மாத காலத்திற்குள் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு தடுப்பூசி ஏற்றப்பட்டிருப்பது போதுமானது என்பதுடன், ஆறு மாதங்களுக்கு முன் நோய்த் தொற்றுக்கு இலக்காகி ஒரு தடுப்பூசி மட்டும் ஏற்றப்பட்டிருந்தால் அவர்கள் கோவிட் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டுமெனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
முழு அளவில் தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாத சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்குள் பிரவேசிக்க 72 மணித்தியாலங்களுக்குள் கோவிட் பரிசோதனை செய்து கொள்ள வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.