தமிழகம் இதுவரை சந்தித்துள்ள 3 அலைகளிலும் முதன்முறையாக 400 க்கும் கீழ் தினசரி தொற்று எண்ணிக்கை குறைந்திருக்கிறது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 55,994 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 366 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 100 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டால் சராசரியாக 0.7 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்படும் அளவிற்கு தொற்று பாதிப்பு வெகுவாகக் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளனர்.
கோவிட் முதல் காலகட்டத்தில் 2020 ஜீலை 27 ஆம் தேதி 6993 பேருக்கு அதிகபட்சமாக ஒரே நாளில் தொற்று உறுதியானது. முதல் அலை படிப்படியாகக் குறைந்த போது 2021 பிப்ரவரி 20 ஆம் தேதி 438 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்தது. அதன் பிறகு மீண்டும் 2 ஆம் அலையால் தொற்று உயரத் தொடங்கியது.
இதேபோல் இரண்டாம் அலையில் 2021 மே 21 ல் 36,184 பேருக்கு ஒரே நாளில் தொற்று உறுதியாகியது. 2021 டிசம்பர் 24 ல் 597 பேருக்கு என்ற அளவில் குறைந்தது. ஆனால் அதன் பிறகு தொடர்ந்து ஏற்றம் கண்டு 3 ஆம் அலை தொடங்கியது.
மூன்றாம் அலையிலோ 2022 ஜனவரி 22 30,744 பேருக்கு தொற்று உறுதியானதுடன் பபடிப்படியாக எண்ணிக்கை குறைந்து இன்று மூன்று அலைகளுக்கும் சேர்த்தே முதல் முறையாக 400 க்கும் கீழ் பதிவாகியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM