கீவ் : ருமேனியா, ஹங்கேரி எல்லைகளில் இருந்து சிறப்பு விமானங்கள் மூலம் இதுவரை 1000த்திற்கும் அதிகமான இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர். உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களை மீட்கும் நடவடிக்கைக்கு ‘ஆபரேஷன் கங்கா’ என ஒன்றிய அரசு பெயரிட்டுள்ளது. இதன் மூலம் நேற்று வரை உக்ரைனின் அண்டை நாடுகள் வழியாக 4 விமானங்கள் மூலம் இந்திய மாணவர்கள் நாடு திரும்பி உள்ளனர். ருமேனியாவின் புக்கரெஸ்டில் இருந்து புறப்பட்ட முதல் ஏர் இந்தியா விமானம் நேற்று முன்தினம் 219 மாணவர்களுடன் மும்பை வந்தடைந்தது. அதைத் தொடர்ந்து, 2வது விமானம் 250 மாணவர்களுடன் நேற்று அதிகாலை டெல்லி விமான நிலையத்தை வந்தடைந்தது. ஹங்கேரி தலைநர் புடாபெஸ்ட் நகரில் இருந்து 240 மாணவர்களுடன் 3வது விமானம் டெல்லிக்கும், புக்கரெஸ்ட்டில் இருந்து 198 மாணவர்களுடன் 4வது விமானம் டெல்லிக்கும் நேற்று வந்தடைந்தன.உக்ரைனில் சிக்கித் தவித்த இந்தியர்களை மீட்டுக் கொண்டு 5வது விமானம் டெல்லி வந்தது. இந்த நிலையில், ருமேனியா தலைநகர் புக்காரெஸ்டில் இருந்து 249 இந்தியர்கள் இன்று காலை 5வது விமானத்தில் டெல்லி வந்தனர்.ருமேனியா, ஹங்கேரியில் இருந்து வந்த 5 விமானங்களில் உக்ரைனில் வசித்த 1,156 இந்தியர்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர்.உக்ரைனில் மருத்துவம் உள்ளிட்ட படிப்பு படிக்க சென்ற 16,000 இந்திய மாணவர்கள் போர் காரணமாக அங்கு சிக்கியது குறிப்பிடத்தக்கது. இப்போதும் பல மாணவர்கள், உக்ரைனில் உணவு, தண்ணீர் இல்லாமல் பதுங்குகுழிகளில் பதுங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. உக்ரைனில் இருந்து மீட்கப்படும் இந்திய மாணவர்கள் விசா இன்றி தங்கள் நாட்டு எல்லை வழியாக தாயகம் திரும்ப போலந்து அரசு அனுமதி வழங்கி உள்ளது.இதனிடையே உக்ரைனில் இருந்து எஞ்சிய இந்தியர்களை மீட்க 7 சிறப்பு விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி புக்காரெஸ்டுக்கு 5 விமானங்களும், புடாபெஸ்டுக்கு 2 விமானங்களும் இயக்கப்படுகின்றன.