மேற்கிந்திய தீவுகளை வைட் வாஷ் செய்த ஒரே வாரத்தில் இலங்கைக்கு எதிரான டி20 தொடரையும் முழுமையாக வென்றிருக்கிறது இந்திய அணி. நேற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் அரைசதம் அடித்து அசத்த எளிதாகப் போட்டியை வென்றது இந்தியா. இத்தொடரில் அவர் அடிக்கும் மூன்றாவது அரைசதம் இது. மூன்று போட்டிகளில் அவர் மொத்தமாக அடித்துள்ள மொத்த ரன்கள் 204 (ஸ்ட்ரைக் ரேட் – 174.35)
முதல் ஆட்டத்தில் பொறுமையாகத் தொடங்கி இறுதியில் அதிரடி காட்டிய ஷ்ரேயாஸ் அதற்கடுத்த இரண்டு போட்டிகளிலும் தொடக்கத்தில் இருந்தே அதிரடியை கையில் எடுத்தார். அதுவும் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு முழு ஒத்துழைப்பைக் கொடுத்து கொண்டிருந்த தரமான ஆடுகளத்தில் அவர்களை மிக நேர்த்தியாக எதிர்கொண்டார் அவர்.
முன்னதாக டாஸை வென்ற இந்தியா, இலங்கையை பேட் செய்ய அழைக்க அந்த அணி 146 ரன்கள் மட்டுமே அடித்தது. முதல் போட்டியை போல நேற்றும் பவர்பிளேவில் முழுமையாகக் கோட்டை விட்டிருந்தனர் இலங்கை பேட்டர்கள். முதல் ஓவரின் கடைசி பந்திலேயே சிராஜ் பந்தில் போல்ட் ஆனார் குணதிலகா. இரண்டாவது ஓவரில் நிசங்காவை வெளியேற்றிய அவேஷ் கான், நான்காவது ஓவரின் கடைசி பந்தில் அசலங்காவை அவுட்டாக்கினார். முதல் ஆறு ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு இலங்கை அணியால் 18 ரன்கள் மட்டும் அடிக்க முடிந்தது.
மேலும் இரண்டு விக்கெட்டுகள் விழ 13 ஓவர் முடிவில் 64/5 என்றிருந்தது இலங்கையின் ஸ்கோர். 6 என்னும் ரன்ரேட்டையே 17-வது ஓவரில்தான் தொட்டது அந்த அணி. கடைசி நான்கு ஓவர்களில் கேப்டன் ஷனகா கொடுத்த சிறப்பான ஃபினிஷ்ங் இலங்கை அணியை ஓரளவிற்கு போட்டியினுள் இருக்க உதவியது. 38 பந்துகளில் 74 ரன்கள் அடித்திருந்தார் அவர்.
இரண்டாவது இன்னிங்ஸில் எந்தத் தவறையும் செய்யவில்லை இந்தியா. ரோஹித்துடன் மற்றொரு ஓப்பனராகக் களமிறங்கியவர் சஞ்சு சாம்சன். முந்தைய ஆட்டத்தைப் போல இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சை சமாளித்து செட்டில் ஆவதற்கு ரொம்பவும் தடுமாறிய ரோஹித் 9 பந்துகளில் 5 ரன்கள் அடித்த நிலையில் சமீரா பந்தில் டாப் எட்ஜாகி கேட்ச் ஆனார். பவர்பிளே முடிந்த அடுத்த ஓவரில் 18 ரன்களுக்கு அவுட்டனர் சாம்சன். அதற்கடுத்த வந்த ஹூடா 21 ரன்களிலும் வெங்கடேஷ் ஐயர் 5 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர். ஆனால் மற்றொரு எண்டில் இருந்த ஷ்ரேயாஸின் பேட்டில் இருந்து எந்தக் குறையும் இல்லாமல் ரன்கள் வந்துக்கொண்டே இருந்தன. ஜடேஜாவும் தன் பங்கிற்கு சில பவுண்டரிகளை அடிக்க 17-வது ஓவரிலேயே போட்டியை முடித்தது இந்தியா.
இவ்வெற்றியின் மூலம் தொடர்ச்சியாக 12 டி20 ஆட்டங்களை வென்று ஆப்கானிஸ்தான் வசம் உள்ள உலகச்சாதனையை சமன் செய்துள்ளது இந்திய அணி. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் சூர்யகுமார், வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் மிடில் ஆர்டரில் கலக்க, இத்தொடரில் ஷ்ரேயாஸ் மற்றும் ஜடேஜா மிகச் சிறப்பாக ஆடினர். அதுவும் பேட்டிங்கில் தன் வழக்கமான இடத்திலிருந்து முன்னதாகவே களமிறங்கும் ஜடேஜா, ஒவ்வொரு போட்டியிலும் சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார். தற்போதைய இந்திய அணியில் திறமைகளுக்கு எந்த குறையும் இல்லை. அணியின் ஒவ்வொரு இடத்தில் ஆடுவதற்கும் எக்கச்சக்க ஆப்ஷன்கள் உள்ளன. வீரர்களின் நிலைதன்மையை அறிந்து உலகக்கோப்பைக்கு முன்னதாக ஒரு சிறந்த அணியை கட்டமைப்பதுதான் இப்போதைக்கு ரோஹித் முன்னே உள்ள சவால்.