High court order to police to provide security to ADMK councillors: மதுரை மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த அதிமுக பேரூராட்சி கவுன்சிலர்களுக்கு பாதுகாப்பு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சிக்கு அண்மையில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக கவுன்சிலர்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி நடைபெற்றது. திமுக பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ள நிலையில், அதிமுக குறைந்த அளவிலான வெற்றியையே பதிவு செய்தது.
இந்தநிலையில், உள்ளாட்சி அமைப்புகளின், தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் வரும் 4 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனிடையே வெற்றி பெற்ற உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் நாளை (பிப்ரவரி 2) பதவியேற்க உள்ளனர்.
இந்தநிலையில், திமுக பிரமுகர்களால் தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறியும், காவல்துறை பாதுகாப்புக் கோரியும், பரவை பேரூராட்சி அதிமுக கவுன்சிலர்கள் 8 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அதிமுக கவுன்சிலர்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டது.
முன்னதாக அதிமுக கவுன்சிலர்கள் தாக்கல் செய்த மனுவில், பரவை பேரூராட்சியில் மொத்தம் உள்ள 15 வார்டுகளில் 8 வார்டுகளில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பேரூராட்சியில் மற்ற 7 வார்டுகளில், 6 வார்டுகளில் திமுக வேட்பாளர்களும், ஒரு வார்டில் சுயேச்சை வேட்பாளரும் வெற்றி பெற்றுள்ளனர்.
இதையும் படியுங்கள்: யூடியூப்பில் ‘இந்து தீவிரவாதி’ என பேட்டியளித்தவர் கைது – சைபர் கிரைம் போலீசார் அதிரடி!
அ.தி.மு.க.,வுக்கு 8 கவுன்சிலர்கள் பெரும்பான்மையாக இருப்பதால், பேரூராட்சிக்கு தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கு தங்கள் கட்சி கவுன்சிலர்களை தேர்வு செய்ய முடியும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.
மேலும், பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கு நிறுத்தப்படும் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு அதிமுக கவுன்சிலர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களை திமுகவினர் மிரட்டி வருவதாக கூறி, மனுதாரர்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பேரூராட்சி அதிமுக கவுன்சிலர்களும் போலீஸ் பாதுகாப்பு கேட்டு தனித்தனியாக மனு அளித்தனர். அன்னவாசல் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 15 வார்டுகளில் 9 பேர் அதிமுக கவுன்சிலர்கள்.
இதனையடுத்து, பரவை மற்றும் அன்னவாசல் பேரூராட்சிகளைச் சேர்ந்த அதிமுக கவுன்சிலர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்குமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் உத்தரவிட்டார்.