சென்னை: திமுகவினரை தாக்கியதாக, கோவை வெள்ளலூர் பேரூராட்சியைச் சேர்ந்த 3 அதிமுக கவுன்சிலர்களை கைது செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் வெள்ளலூர் பேரூராட்சிக்கு நடைபெற்ற தேர்தலில் 15 வார்டுகளில் 8 வார்டுகளை அதிமுக கைப்பற்றியுள்ளது. அந்த வெற்றிக் கொண்டாட்ட ஊர்வலத்தின்போது, திமுக பிரமுகரையும், அவரது சகோதரரையும் தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரில், போத்தனூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு அதிமுக கவுன்சிலர்கள் சந்திரகுமார், கருணாகரன், கணேசன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அவர்களது மனுவில், வெற்றிக் கொண்டாட்டத்திற்கு இடையே இரு சக்கர வாகனத்தை நிறுத்தி, திமுக தொண்டர் தகராறு செய்தார். ஆனால் நாங்கள் அவரை தாக்கியதாகவும், ஆபாசமாக திட்டியதாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பேருராட்சி தலைவர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் உள்நோக்கத்துடன் புகார் அளிக்கப்பட்டு, இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கோரியிருந்தனர்.
இந்த ஜாமீன் மனுக்கள் நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, நாளை பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளதால் மனுதாரர்கள் கோரிக்கையை எற்று, 3 பேரையும் கைது செய்யத் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் வழக்கு குறித்து போத்தனூர் காவல் நிலையத்தினர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 7-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.