புதுடெல்லி:
உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலைத் தொடர்ந்து அங்குள்ள மாணவர்கள் உள்பட ஏராளமான இந்தியர்கள் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களை தாய்நாடு அழைத்து வரும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது.
இதற்கிடையே, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உக்ரைன் நெருக்கடி குறித்த உயர்மட்டக் குழு கூட்டம் புதுடெல்லியில் நடைபெற்றது. மத்திய மந்திரிகள் ஹர்தீப் சிங் பூரி, ஜோதிராதித்ய சிந்தியா, கிரண் ரிஜிஜூ, வி.கே.சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது, உக்ரைனில் சிக்கிய இந்தியர்களை மீட்கும் பணியை துரிதப்படுத்த உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு மத்திய மந்திரிகளை அனுப்ப முடிவானது.
மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா ருமேனியா, மால்டோவா நாடுகளுக்கும், மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ சுலோவாகியாவுக்கும், மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரி ஹங்கேரிக்கும், மத்திய இணை மந்திரி வி.கே.சிங் போலந்துக்கும் செல்ல உள்ளார் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்க மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரி இண்டிகோ விமானம் மூலம் பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஆப்ரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் இந்தியர்களை மீட்க இன்ஸ்தான்புல் வழியாக ஹங்கேரிக்கு செல்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்…உக்ரைனில் இருந்து இந்தியர்கள் வெளியேற்றத்திற்கு உதவும் அண்டை நாடுகள் – பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்