புதுடெல்லி:
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது.
ஆபரேஷன் கங்கா என்ற பெயரில் நடைபெற்று வரும் இந்த திட்டத்தின் உக்ரைனின் அண்டை நாடுகளான ஹங்கேரி, ருமேனியா போன்ற நாடுகளில் இருந்து உக்ரைன்வாழ் இந்தியர்களுடன் அடுத்தடுத்து விமானங்கள் இந்தியா வந்து கொண்டிருக்கின்றன.
இதன்படி ருமேனியாவின் புகாரெஸ்டில் இருந்து சிறப்பு விமானம் நேற்றிரவு புதுடெல்லி வந்தடைந்தது. அதில் மாணவர்கள் உள்பட 218 இந்தியர்கள் இருந்தனர்.
இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இந்திய மாணவர்களை வரவேற்ற மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், அவர்களுடன் கலந்துரையாடினார்.
பின்னர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:
உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களை பத்திரமாக தாய் நாட்டிற்கு அழைத்த வர தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பிரதமர் மோடி எடுத்துள்ளார்.
மத்திய அரசின் முயற்சியால் உக்ரைனில் உள்ள மாணவர்கள் மத்தியில் நாடு திரும்பும் நம்பிக்கையை அதிகரித்துள்ளது.இந்தியா திரும்பிய மாணவர்கள், உக்ரைனில் உள்ள தங்கள் நண்பர்களிடம் பத்திரமாக மீட்கப்படுவீர்கள் என தெரிவிக்க வேண்டும்.
இதற்காக அடுத்தடுத்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மீட்பு பணிகளை துரிதப்படுத்த நான்கு மத்திய மந்திரிகள் உக்ரைன் அண்டை நாடுகளுக்கு சென்றுள்ளனர். இவ்வாறு அவர் குறிப்பிட்டார். ‘
இதையும் படியுங்கள்…
ஆபரேஷன் கங்கா திட்டம் – இந்தியர்களை மீட்கும் பணியில் இந்திய விமானப்படை விமானம்