பிரிஸ்பேன் : ஆஸ்திரேலியாவில் பெய்துவரும் கனமழையால், கிழக்கு கடற்கரை பகுதியான பிரிஸ்பேன் நகரில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி எட்டு பேர் உயிரிழந்தனர்.
ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள குயின்ஸ்லாந்து மாகாணத்தின் பிரிஸ்பேன் நகரில், கனமழை பெய்து வருகிறது. இதனால், அங்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் வணிக வளாகங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.சாலைகள் அனைத்தும் நீரில் மூழ்கிக் கிடக்கின்றன. ஏராளமான கார்கள் வெள்ளத்தில் சிக்கி மிதக்கின்றன.
வெள்ளத்தில் சிக்கிய காரில் இருந்து, 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். வெள்ளத்தில் சிக்கி, இதுவரை எட்டு பேர் உயிரிழந்தனர்; 130 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.மாகாணத்தின் பல பகுதிகளில், மின் இணைப்பு மற்றும் தொலைத் தொடர்பு முற்றிலும் செயலிழந்து விட்டது.
இடைவிடாமல் மழை கொட்டிக் கொண்டிருப்பதால், வெள்ளத்தின் அளவு உயர்ந்து கொண்டே வருகிறது. தற்போது, ஐந்து அடி வரை வெள்ளம் தேங்கிஉள்ளது. கடந்த 2011ம் ஆண்டுக்குப் பிறகு, பிரிஸ்பேனில் ஐந்து நாட்களாக கன மழை கொட்டி வருகிறது.
Advertisement