சிங்கப்பூர் : சிங்கப்பூரில் லஞ்சம் பெற்ற வழக்கில், இந்திய வம்சாவளிக்கு நான்கு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில், அரசு நிலங்களை பசுமையாக பராமரிக்கும் பணிகளை, தேசிய பூங்கா வாரியம் நிர்வகித்து வருகிறது. இந்த வாரியத்தின் இயக்குனராக, 2018 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில், பணியாற்றிய இந்திய வம்சாவளியான தேவராஜ் பழனிசாமி, 70, லஞ்சம் பெற்றதாக புகார்கள் எழுந்தன.ஒப்பந்தக்காரர்களின் வணிக நலனுக்காக, அவர்களுக்கு தேவராஜ் பல சலுகைகளை சட்டவிரோதமாக வழங்கியுள்ளார்.
அதற்கு பலனாக லஞ்சம் பெற்றுள்ளார். பணமாக அல்லாமல், மலேஷியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை ஒப்பந்தக்காரர்கள் அவருக்கு செய்து தந்துள்ளனர். அதன்படி, தேவராஜ் ஆறு முறை மலேஷியாவுக்கு சுற்றுப் பயணம் சென்று வந்தது அம்பலமானது.
இது தொடர்பான வழக்கு, நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தன் மீதான குற்றச்சாட்டுகளை தேவராஜ் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அவருக்கு நான்கு மாத சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் அவருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
Advertisement