Rahul Gandhi asks Stalin to write book about how to stay young: இளமையாக இருப்பது எப்படி என ஸ்டாலின் புத்தகம் எழுத வேண்டும் என காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி கூறியுள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள அவரது வாழ்க்கை சுயசரிதையான ‘உங்களில் ஒருவன்’ (முதல் பாகம்) நூல் வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கேரள முதல்வர் பினராயி விஜயன், காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, பீகார் எதிர்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ், மற்றும் தமிழகத்தில் உள்ள திமுக தோழமை கட்சிகளின் தலைவர்கள் கலந்துக் கொண்டார். காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி புத்தகத்தை வெளியிட்டார்.
இந்த விழாவில் பேசிய ராகுல் காந்தி பல்வேறு அரசியல் கருத்துகளை பேசினார். பின்னர் இளமையாக இருப்பது எப்படி என ஸ்டாலின் புத்தகம் எழுத வேண்டும் என கூறினார்.
இதையும் படியுங்கள்: ஸ்டாலின் புத்தக வெளியீட்டு விழா; தேஜஸ்வி வருகை பின்னணி
இது குறித்து ராகுல் காந்தி பேசியதாவது, இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வது குறித்து எனது அம்மாவிடம் பேசும்போது, அவர் மு.க.ஸ்டாலினுக்கு நாளை பிறந்தநாள் என்று என்னிடம் தெரிவித்தார். நான் அவரிடம் எனக்குத் தெரியும் என்று கூறினேன். அதன்பிறகு, அவரிடம் மு.க.ஸ்டாலின் வயது என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டேன். அதற்கு அவர் எத்தனை வயது என்று கேட்டார். நான், 69 என்று கூறினேன். அதனை அவர் நம்ப மறுத்தார்.
ஸ்டாலினுக்கு எத்தனை வயது இருக்கும் என்று நினைக்கிறீர்கள் என்று கேட்டேன். அவருக்கு 58 அல்லது 60 என்று கூறினார். உடனே, கூகுள் செய்து ஸ்டாலினின் வயதைக் காட்டினேன். அப்போதுதான் அவர் நம்பினார். இந்தப் புத்தகத்தில் ஸ்டாலின் இளமையாக இருப்பது குறித்து எழுதியுள்ளாரா என்று தெரியவில்லை. ஆனால், தான் இளமையாக இருப்பது குறித்து ஸ்டாலின் ஒரு புத்தகம் எழுத வேண்டும் என்று கூறினார்.
இவ்வாறு ராகுல் காந்தி பேசியதை கேட்டு மு.க ஸ்டாலின் உள்பட அனைவரும் சிரித்தனர்.