உகான் மார்க்கெட்டில் இருந்துதான் கொரோனா பரவியது: ஆய்வில் கண்டுபிடிப்பு

புதுடெல்லி :

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர்-டிசம்பர் மாதவாக்கில் கொரோனா வைரஸ் உருவானது. பின்னர், உலகம் முழுவதும் பரவியது. அதன் தாக்கம் இன்னும் நீடித்து வருகிறது. சீனாவில் உகான் நகரில் உள்ள ஹூனான் மார்க்கெட்டில் இருந்துதான் கொரோனா உருவானதாக கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் சீன அதிகாரிகள் அடையாளம் கண்டறிந்தனர்.

கொரோனா உருவானது குறித்து கடந்த ஆண்டு உலக சுகாதார அமைப்பு ஆய்வு நடத்தியது. அதில், ஹூனான் மார்க்கெட்டில் வவ்வாலில் இருந்து மற்றொரு விலங்கு வழியாக மனிதர்களுக்கு கொரோனா பரவியதாக கண்டறியப்பட்டது. சீனாவில் உள்ள வைரஸ் ஆய்வுக்கூடத்தில் கொரோனா வைரசை செயற்கையாக சீனா உருவாக்கியதாகவும் ஒரு கருத்து உலவுகிறது.

இந்தநிலையில், விஞ்ஞானிகள் சிலர் கொரோனா வைரஸ் எப்படி உருவானது என்று 3 ஆய்வுகளை நடத்தினர். அவற்றின் முடிவுகளை வெளியிட்டுள்ளனர். அவற்றில் 2 ஆய்வுகளில், உகான் நகரில் உயிருடன் பாலூட்டி ரக விலங்குகளை விற்கும் ஹூனான் மொத்த மார்க்கெட்டில் இருந்துதான் கொரோனா பரவியதாக அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மரபணு பகுப்பாய்வு மூலம் இதை கண்டறிந்து, அதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளனர். கொரோனா மாதிரிகளுக்கும், ஹூனான் மார்க்கெட்டுக்கும் இடையிலான தொடர்பை புவியியல் சார்ந்த பகுப்பாய்வு மூலம் உறுதி செய்துள்ளனர்.

3-வது ஆய்வில், அதே மார்க்கெட்டில் விற்கப்பட்ட விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2 தடவை கொரோனா பரவியதாக கூறப்பட்டுள்ளது.

ஆனால், சீன ஆய்வுக்கூடத்தில் செயற்கையாக கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டதாக கூறப்படுவதற்கு ஆதாரம் எதுவும் இல்லை என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இந்த ஆய்வுகளை நடத்தியவர்களில் ஒருவரான அரிசோனா பல்கலைக்கழகத்தின் பரிணாம உயிரியல் நிபுணர் மைக்கேல் வோரோபி, ‘‘எல்லா ஆய்வுகளையும் இணைத்து பார்த்தால், ஹூனான் மார்க்கெட்டில் இருந்து கொரோனா உருவானது தெளிவாக தெரியும்’’ என்று தெரிவித்துள்ளார்.

எந்த விலங்கில் இருந்து கொரோனா பரவியது என்று விஞ்ஞானிகள் உறுதிபட தெரிவிக்கவில்லை. இருப்பினும், ‘ரக்கூன் டாக்’ என்ற பாலூட்டி வகை நாயிடம் இருந்து பரவி இருக்கலாம் என்று கிறிஸ்டியன் ஆன்டர்சன் என்ற வைரஸ் நோய் நிபுணர் கணித்துள்ளார். இந்த விலங்கு, உணவுக்காகவும், உரோமத்துக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

அதே சமயத்தில், இந்த ஆய்வு முடிவுகளை ஏற்றுக்கொள்ளாத விஞ்ஞானிகளும் உள்ளனர். ஹூனான் மார்க்கெட்டில் விற்கப்பட்ட விலங்குகளில் கொரோனா இருந்ததற்கு போதிய நேரடி ஆதாரங்கள் இல்லை என்று ஜெஸ்சி புளும் என்ற வைரஸ் நோய் நிபுணர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்கலாம்…
இந்தியாவில் கொரோனா 4-வது அலை ஜூன் 22-ந்தேதி தொடங்கும்: ஆராய்ச்சியாளர்கள் கணிப்பு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.