ரஷ்யா – உக்ரைன் இடையே போர் நடைபெற்றுவரும் நிலையில், உக்ரைனிலும் அதன் எல்லைப் பகுதியிலும் அண்டை நாடுகளிலும் சிக்கியிருக்கும் தமிழக மாணவர்கள் தங்களை மீட்டுச் செல்லும்படி தொடர்ந்து வீடியோக்களை அனுப்பி வருகின்றனர். மறுபுறம் அவர்களின் பெற்றோர் தங்களது பிள்ளைகள் பத்திரமாக மீண்டு வரவேண்டும் என பரிதவிப்புடன் காத்திருக்கின்றனர்.
தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்த தர்மேந்திரன் என்ற மாணவர் உக்ரைனில் இரண்டாம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார். போருக்குப் பயந்து இவர் கார்கிவில் தஞ்சமடைந்திருக்கும் விடுதி ஒன்றின் நிலவறையில் போதிய சாப்பாடு, தண்ணீர், கழிப்பிட வசதிகள் இன்றித் தவிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மகனை எப்படியாவது மீட்டுக் கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தர்மேந்திரனின் தந்தை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது ஒருபுறம் இருக்க, பல கிலோ மீட்டர்களைக் கடந்து ருமேனிய எல்லைக்கு வந்த பின்பும், அந்நாட்டுக்குள் நுழைய கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், 3 நாட்களாக எல்லையிலேயே காத்திருக்கும் பெருங்கூட்டத்தையும் காண முடிகிறது. தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த சாமுவேல் என்ற மருத்துவ மாணவர், ருமேனிய எல்லையில் தங்க இடம் கூட இன்றி தவித்து வரும் நிலையில் வீடியோவாக அனுப்பியுள்ளார்.
உக்ரைனின் சப்போரிஷியா பகுதியில் குறுகலான நிலவறை ஒன்றில் கும்பலாக சிக்கியிருக்கும் தமிழக மாணவிகள், எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இன்றி குண்டு சப்தங்களுக்கு நடுவே தவித்து வருவதாகக் கூறுகின்றனர். நிலவறை மிகக் குறுகலாக இருப்பதாகவும் அதிலேயே நூற்றுக்கும் மேற்பட்டோர் தஞ்சமடைந்து இருப்பதால் மூச்சுப் பிரச்சனை வருவதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பகுதியைச் சேர்ந்த முகம்மது கைஃப் என்ற மாணவர் அதே சப்போரிஷியா பகுதியில் மருத்துவம் படித்து வருகிறார். அவர் தங்கியிருக்கும் நிலவறைக்குப் பக்கத்திலேயே தாக்குதல் நடப்பதால், அதனை விட்டு வெளியே வர முடியாமல், உணவு உண்ணாமல் மகன் தவிப்பதாகவும் கூறிய முகம்மது கைஃப்பின் தாய், பேச முடியாமல் உடைந்து அழுதார்.