புதுடெல்லி:
போர் பதற்றம் நிலவி வரும் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள், மீட்டு, தாயகம் அழைத்து வரும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது.
உக்ரைனின் அண்டை நாடுகளான ருமேனியா, மால்டோவா, ஹங்கேரி, போலந்து உள்ளிட்ட நாடுகள் இந்தியர்கள் வெளியேற்றத்திற்கு உதவி வருகின்றன.
இந்நிலையில், இந்தியர்களுக்கு உதவி செய்யும் உக்ரைனை ஒட்டி அமைந்துள்ள அண்டை நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி பேசியதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
ருமேனியா பிரதமர் நிக்கோலே சியூகாவுடன் தொலைபேசி மூலம் பேசிய பிரதமர் மோடி, உக்ரைனில் இருந்து இந்தியர்கள் வெளியேற விசா இல்லாமல் அனுமதி வழங்கியதற்காக நன்றி தெரிவித்தார்.
இந்தியாவில் இருந்து வரும் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியர்கள் நாடு திரும்பும் நடவடிக்கையை மேற்பார்வையிட, விமானப் போக்குவரத்துத்துறை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியாவை தனது சிறப்புத் தூதராக நியமித்திருப்பது குறித்தும் பிரதமர் எடுத்துரைத்தார்.
உக்ரைனில் நடந்து வரும் வன்முறை மற்றும் மனிதாபிமான நெருக்கடி குறித்து பிரதமர் மோடி தனது வேதனையை வெளிப்படுத்தினார்.
போரை நிறுத்தி இருநாடுகளும் பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டியதன் அவசியத்தை பிரதம்ர் வலியுறுத்தினார்.
நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மதிப்பதன் முக்கியத்துவத்தையும் பிரதமர் எடுத்துரைத்தார்.
இதேபோல், ஸ்லோவாகிய குடியரசு நாட்டின் பிரதமர் எட்வார்ட் ஹெகருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியதாக பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.