போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டில் இருந்து இந்தியர்களை மீட்கும் பணியை ஒருங்கிணைக்க 4 மத்திய அமைச்சர், உக்ரைன் அண்டை நாடுகளுக்கு செல்கின்றனர்.
உக்ரைன் எல்லையில் நீண்டநாட்களாக படைகளுடன் காத்திருந்த ரஷ்யா, கடந்த 24-ம் தேதி உக்ரைனுக்குள் நுழைந்து தாக்குதலை தொடங்கியது. ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைனில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் உட்பட சுமார் 40 ஆயிரம் இந்தியர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. போர் நடைபெறும் பகுதியில் சிக்கித் தவிக்கும் இவர்களை மீட்க, மத்தியஅரசு தொடர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த மீட்புப் பணிக்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயரிடப்பட்டுள்ளது.
உக்ரைனில் இருக்கும் இந்தியர்கள் அதன் அண்டை நாடுகளுக்கு சாலை மார்க்கமாக அழைக்கப்பட்டு, பிறகு அங்கிருந்து விமானங்கள் மூலம் தாயகம் அழைத்து வரப்படுகின்றனர்.
இந்நிலையில், இந்திய மாணவர்களுக்கு உதவிடவும் அவர்களை அங்கிருந்து வெளியேற்றி அழைத்து வரும் பணியை ஒருங்கிணைக்கவும் மத்திய அமைச்சர்கள் ஹர்தீப் சிங் புரி, ஜோதிராதித்ய சிந்தியா, கிரண் ரஜிஜு, வி.கே.சிங் ஆகியோர் உக்ரைன் அண்டைநாடுகளுக்கு செல்கின்றனர். இதற்கான முடிவு பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற உயர்நிலைக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
இந்த 4 அமைச்சர்களில் ஜோதிராதித்ய சிந்தியா, ருமேனியாமற்றும் மால்டோவில் இருந்து மேற்கொள்ளப்படும் மீட்புப் பணியை கவனிப்பார். கிரண் ரிஜிஜு, ஸ்லோவாக்கியா நாட்டுக்கும் ஹர்தீப் சிங் புரி, ஹங்கேரிக்கும் செல்கின்றனர். வி.கே.சிங், போலந்து நாட்டில் இருந்து மீட்புப் பணியை நிர்வகிப்பார்.
இதனிடையே ‘ஆபரேஷன் கங்கா’ திட்டத்துக்கு உதவிட ‘OpGanga’ என்ற பிரத்யேக ட்விட்டர் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. போலந்து, ருமேனியா, ஹங்கேரி, ஸ்லோவாக் குடியரசு ஆகிய நாடுகள் வழியாக இந்தியர்களை வெளியேற்றுவதற்கு உதவிட 24 மணி நேரமும் செயல்படும் வகையில் பல இடங்களில் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுஉள்ளன.
போலந்து நாட்டில் திறக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டுக்கு அறைக்கு 48225400000, 48795850877, 48792712511 ஆகிய ஹெல்ப்லைன் எண்கள் தரப்பட்டுஉள்ளன. இதுதவிர [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிலும் உதவி கோரலாம் என வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதுபோல் ருமேனியால் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு 40732124309, 40771632567, 40745161631, 40741528123 ஆகிய ஹெல்ப் லைன் எண்களும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹங்கேரி நாட்டில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு 36 308517373, 36 13257742, 36 13257743 ஆகிய தொலைபேசி எண்களும் 36 308517373 என்றவாட்ஸ் அப் எண்ணும் தரப்பட்டுஉள்ளன.
ஸ்லோவாக்கியா நாட்டில் உள்ள கட்டுப்பாட்டு அறையை 421 252631377, 421 252962916, 421 951697560 ஆகிய தொலைபேசி எண்களிலும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்புகொண்டு உதவி கோரலாம் என கூறப்பட்டுஉள்ளது.
6-வது விமானத்தில் 280 இந்தியர்கள் நாடு திரும்பினர்:
ரஷ்யா தொடுத்துள்ள போரினால், உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை ‘ஆபரேஷன் கங்கா’ என்ற பெயரில் மத்திய அரசு மீட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 6-வது விமானம் நேற்று மாலை 6.00 மணிக்கு டெல்லி வந்தடைந்தது. இதில், தமிழகத்தின் 21 மாணவர்கள் உட்பட 280 இந்தியர்கள் பத்திரமாக டெல்லி வந்தடைந்தனர். இவர்களில் 15 மாணவிகள், 5 மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த21 பேரும் உக்ரைனின் உஸ்கரண்ட்தேசிய அரசு மருத்துவப் பல்கலைக்கழகத்தில் படிக்கின்றனர்.
இவர்களை 250 பேர் கொண்ட குழுக்களாக பிரித்து உக்ரைனின் எல்லையில் உள்ள ஹங்கேரி மற்றும் ருமேனியா நாடுகளுக்கு பல்கலைக்கழகம் பேருந்துகளில் அனுப்பி வருகிறது. அதன்படி ஹங்கேரி வந்தவர்களை புத்தபெஸ்ட் விமான நிலையத்தில் இருந்து நேற்றிரவு கிளம்பிய ஏர் இந்தியாவின் 6-வது மீட்பு விமானத்தில் டெல்லி வந்தனர்.
அவர்களில் கோவையை சேர்ந்த 5-ம் ஆண்டு படிக்கும் மாணவி ஆஷிர்பின் நிஸா இந்து தமிழ் நாளிதழிடம் கூறியதாவது: போருக்கு முன்பாக உக்ரைனில் இருந்து எங்கள் அனைவரையும் வெளியேறும்படி இந்திய அரசுஅறிவித்தது. அப்போது எங்களுக்கும் வகுப்புகள் நடந்து கொண்டிருந்ததால் எங்களால் கிளம்ப முடியவில்லை. போர் துவங்கிய பின் பல்கலைக்கழக நிர்வாகம் 10 நாட்களுக்கு விடுமுறை அறிவித்தது. தற்போது தான் மேற்குப்பகுதி எல்லையிலும் போரின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இதற்காக உக்ரைன் ராணுவம் சார்பில் அபாய எச்சரிக்கை ஒலிகளின் வகைகள் பற்றி பொதுமக்களுக்கு விளக்கி வருகின்றனர். இதன் பிறகு எங்களுக்கு உருவானப் பதற்றம் டெல்லி வந்தடைந்த பிறகே முடிவுக்கு வந்தது.
பல்கலைக்கழக நிர்வாகத்தினர் உக்ரைனில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுடன் இணைந்து எங்களை பத்திரமாக திருப்பி அனுப்பும் பணியில் இறங்கினர். ஹங்கேரி எல்லையில் இந்திய அதிகாரிகள் உணவு வழங்கி வரவேற்றனர். டெல்லி வந்த பின் தமிழ்நாடு இல்லத்தின் அதிகாரிகள் அன்புடன் வரவேற்று தமிழக வகை உணவளித்தனர்.
இவ்வாறு ஆஷிர்பின் நிஸா கூறினார். பின்னர் இவர்கள் நேற்றிரவு விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். இதுவரை 6 ஏர் இந்தியா மீட்பு விமானங்களில் தமிழக மாணவர்களில் 43 பேர் வீடு திரும்பி உள்ளனர்.
பொறுமை காக்குமாறும் தூதரகம் அறிவுரை:
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்கள் ரயிலில் மேற்குப் பகுதிக்கு செல்ல இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதால் அங்கு சிக்கியுள்ள இந்தியமாணவர்களை அண்டை நாடுகளான ருமேனியா, ஹங்கேரி, போலந்துக்கு சாலை மார்க்கமாக வரவழைத்து அங்கிருந்து விமானம்மூலம் தாயகம் அழைத்து வரப்படுகின்றனர். இந்த சூழலில் உக்ரைன்தலைநகர் கீவில் செயல்படும் இந்திய தூதரகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
உக்ரைன் தலைநகர் கீவில்ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுஉள்ளது. மீட்புப் பணிக்காகஉக்ரைன் ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குகிறது. எனவே அனைத்து இந்திய மாணவர்களும் ரயில் நிலையங்களுக்கு சென்று அங்கிருந்து மேற்குப் பகுதிக்கு செல்ல வேண்டும். இக்கட்டான இந்த நேரத்தில் இந்தியர்கள், இந்திய மாணவர்கள் பதற்றம் இன்றி ஒற்றுமையாகவும் செயல்பட வேண்டும். ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.
ரயில்கள் தாமதமாக வரலாம்.சில நேரங்களில் ரத்து செய்யப்படலாம். எனவே, இந்தியர்கள் பொறுமையாக காத்திருக்க வேண்டும். ரயில் நிலையங்களில் முண்டியடிக்ககூடாது. மாணவர்கள் தங்களது பாஸ்போர்ட், போதுமான ரொக்கம், உணவுகள், குளிரைத் தாங்கக்கூடிய உடைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை மட்டுமேஎடுத்துச் செல்ல வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.