உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இச்சூழலில் அங்குள்ள இந்திய மாணவர்களை மீட்கும் நடவடிக்கையை மத்திய வெளியுறவுத் துறை தொடங்கியது.
முதல் கட்டமாக உக்ரைன் எல்லையிலுள்ள ஐரோப்பிய நாடான ருமேனியாவில் இருந்து நேற்று முன்தினம், ஏர் இந்தியாவின் முதல் சிறப்பு விமானம் டெல்லி வந்தது. அதில் வந்த இந்தியர்களை மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா டெல்லி விமான நிலையத்தில் வரவேற்றார். இவர்களில் பெரும்பாலானவர்கள் உக்ரைனின் புக்வேனியன் மாநில மருத்துவப் பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர்கள்.
இவர்களில், நேற்று அதிகாலை முதல் மாலை வரை மூன்று விமானங்களில் சுமார் 1,500 மாணவர்கள் டெல்லி திரும்பியுள்ளனர். தமிழகத்தின் பல்வேறு ஊர்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் சுமார் 23 பேரும் இதில் இடம் பெற்றிருந்தனர்.
இதுகுறித்து உக்ரைனில் முதலாம் ஆண்டு பயிலும் சென்னை மாணவர் ஹரிஹர சுதன் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறும்போது, ‘‘போர் குறித்த தகவல் வெளியானவுடன் இந்தியா விலிருந்து எங்களை இக்கல்வி நிலையங்களுக்கு அனுப்பிய மெடிக்கோ ஹட் நிறுவனத்தாரும், எங்கள் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய அதிகாரிகளுடன் பேசிமீட்கும் பணியை ஒருங்கிணைத்தனர். இதன் பலனாக செர்னிவிப்சியிலிருந்து சுமார் 90 கி.மீ தொலைவிலுள்ள ருமேனியாவிற்கு பேருந்துகளில் அழைத்துச் சென்றனர். அங்கிருந்து ஏர் இந்தியாவிமானத்தில் டெல்லி திரும்பினோம்’’ என்றார்.
டெல்லி விமான நிலையத்தில் தமிழகம் உள்ளிட்டப் பல்வேறு மாநிலங்களின் டெல்லி அரசு இல்ல அதிகாரிகள் குவிந்துள்ளனர். இவர்கள், உக்ரைனிலிருந்து வரும் அவர்தம் மாநிலத்தை சேர்ந்த மாணவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுத்து வீடுகள் திரும்ப உதவுகின்றனர். தமிழகத்தின் மாணவ, மாணவிகள் வீடு திரும்ப அனைத்து உதவிகளும் செய்ய டெல்லியின் தமிழ்நாடு அரசு இல்லத்தின் அதிகாரிகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதை ஏற்று உள்ளுரை ஆணையர்களான அதுல்ய மிஸ்ரா, ஆஷிஷ் சட்டர்ஜி மற்றும் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் ஆகியோர் அறிவுறுத்தலின் பேரில் மாணவர்களுக்கு, டெல்லி முதல் தமிழகத்தில் அவர்களுக்கானப் பயணக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப் பட்டு வருகிறது.
இதுகுறித்து செர்னிவிப்சியின் பல்கலைக்கழக முதலாம் ஆண்டு மாணவி புதுக்கோட்டையை சேர்ந்த வி.செல்வப்பிரியா ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் கூறுகையில், ‘‘எங்களுக்கு உணவு உள்ளிட்ட வசதிகள் பல்கலைக்கழத்தினரால் கிடைத்தது. பல்கலை. நிர்வாகம் கூறியபடி எந்த நேரத்திலும் கிளம்பும் வகையில் நாங்கள் தயாராக இருந்தோம். உக்ரைனின் கிழக்குப்பகுதியில் சிக்கியுள்ள மாணவர்களை நினைத்தால் மிகவும் கவலையாக உள்ளது. அங்குதான் தாக்குதலின் உக்கிரம் அதிகமாகி ஆபத்தான சூழல் ஏற்பட்டுள்ளது. அவர்களையும் இந்திய அரசு விரைவில் மீட்க வேண்டும்’’ என்றார்.
உக்ரைனில் சிக்கியுள்ள வெளிநாட்டினர் அருகிலுள்ள ருமேனியா, மால்டோவா, போலந்து மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளில் புகுந்து தப்பும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இவர்களில் இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு மாணவர்களை அவர்களது நாடுகளின் தூதரக அதிகாரிகளும், பல்கலைக்கழக நிர்வாகிகளும் அவரவர் நாடுகளுக்கு திரும்பஉதவி வருகின்றனர்.
ருமேனியா விமான நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்திருப்பதால், அருகிலுள்ள போலந்து நாட்டிலிருந்து இந்திய மாணவர்களின் மீட்புப் பணி துவக்கப்பட்டுள்ளது.