புதுச்சேரி: “உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவர்களை மீட்பதில் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்ற பாரபட்சம் இல்லை” என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி காந்தி சிலையில் நூறு பல் மருத்துவ மாணவர்கள் ஹெல்மெட் அணிந்து டூவீலரில் செல்லும் விழிப்புணர்வு இருசக்கர பேரணியை துவக்கி வைத்து ஆளுநர் தமிழிசை செய்தியாளர்களிடம் கூறியது: “சட்டத்தின்படி கட்டாயப்படுத்தி தலைக்கவசம் அணிவதைவிட நாமே கட்டுப்பாடுகளுடன் இருந்து தலைக்கவசம் அணிய வேண்டும். சட்டத்தை கடுமையாக்கி அபராதம் விதித்தால் போலீசாரை பார்க்கும்போது மட்டும் தலைக்கவசம் அணிகின்றனர். அதன்பின் அணியாமல் செல்கின்றனர். உயிர் பாதுகாப்பு மிக முக்கியமானது.
உக்ரைனில் சிக்கி தவிக்கும் மாணவர்களை மீட்பதில் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்ற எந்த பாரபட்சமும் இல்லை. இந்தியர்கள் அனைவரையும் மீட்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது. மத்திய பகுதியிலும், பிற பகுதியிலும், ரஷ்யாவின் அருகில் உள்ள மாணவர்களை மீட்பதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அனைவரையும் மீட்க மத்திய அரசு முழு முயற்சி எடுத்து வருகிறது. புதுவையில் இருந்து சென்ற மாணவர்கள் அனைவரும் நிச்சயமாக பத்திரமாக மீட்கப்படுவார்கள்.
புதுவையில் 85 சதவீதத்தினருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களும் தடுப்பூசி போட வலியுறுத்தி வருகிறோம். சுகாதாரத்துறை கணக்கெடுப்பில் சில குறைகள் உள்ளதால் தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளதாக தெரிகிறது.
உக்ரைன் நாட்டு மாணவர்களை மீட்க அளிக்கப்படும் முக்கியத்துவம், இலங்கையில் சிக்கியுள்ள மீனவர்களை மீட்கவும் அளிக்கப்பட்டு வருகிறது. காரைக்கால் மீனவர்களை மீட்டெடுக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் பேசியுள்ளோம்” என்று அவர் குறிப்பிட்டார்.