ரஷ்ய படையினர், உக்ரைனின் கார்கிவ் நகரை இலக்கு வைத்து நடத்திய செல் வீச்சு தாக்குதலில் உக்ரைனில் கல்வி கற்று வந்த இந்திய மாணவன் உயிரிழந்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் இராணுவ தாக்குதலில் உக்ரைனில் கல்வி கற்று வந்த வெளியாட்டு மாணவன் உயிரிழந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
உக்ரைனில் பல நாடுகளை சேர்ந்த மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.
இந்த மாணவர்களை அங்கிருந்து அழைத்துச் செல்ல பல நாடுகள் நடவடிக்கை எடுத்திருந்தன. இந்தியாவும் ரஷ்ய இராணுவம் உக்ரைனை ஆக்கிரமிக்கும் முன்னர் மாணவர்களை அழைத்து வர சிறப்பு விமானங்களை சேவையில் ஈடுபடுத்தியது.
இந்த நிலையில் உக்ரைனில் கல்வி கற்று வந்த இந்திய மாணவன் இன்று காலை இடம்பெற்ற செல் வீச்சு தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். இந்தியாவின் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நவீன் என்ற மாணவனே உயிரிழந்ததாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இது மிகவும் துரதிஷ்டவசமான சம்பவம் என இந்திய வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.
கார்கிவ் உக்ரைன் நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய நகரமாகும். இவ்வாறான நிலையில், ரஷ்யா, அந்த நகரில் வாழும் மக்களின் உயிர் பாதுகாப்பை ஆபத்துக்குள் தள்ளும் வகையில் தொடர்ந்தும் தாக்குதல்களை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.