நியூயார்க்: ‘உக்ரைனில் வன்முறையை நிறுத்தி, ரஷ்யா – உக்ரைன் இரண்டும் நேர்மையான முறையில் பேச்சு நடத்தி, பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்’ என, ஐ.நா.,வில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனில், ரஷ்ய படைகள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
இதையடுத்து, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், இரு தீர்மானங்கள் கொண்டு வரப்பட்ட நிலையில், ஐ.நா., பொதுச் சபையின் சிறப்பு அவசர கூட்டம் நடந்தது.
இதில், ஐ.நா.,வுக்கான இந்திய துாதர் டி.எஸ்.திருமூர்த்தி பேசியதாவது:
உக்ரைன் நிலவரம் மோசமாகி வருவது இந்தியாவுக்கு கவலை அளிக்கிறது. உக்ரைனில் உடனடியாக வன்முறை கைவிடப்பட வேண்டும் என, இந்தியா மீண்டும் கேட்டுக் கொள்கிறது.
சுமுக தீர்வுக்கு பேச்சு நடத்துவதை தவிர வேறு வழியில்லை என, இந்தியா திடமாக நம்புகிறது.
இதையேதான், சமீபத்தில் உக்ரைன் மற்றும் ரஷ்ய அதிபர்களுடன் பேசியபோதும், பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
கருத்து வேறுபாடுகளுக்கு தீர்வு காண, நேர்மையாகவும், அக்கறையுடனும் தொடர்ந்து பேச வேண்டும் என்ற தன் நிலைப்பாட்டை, இந்தியா மீண்டும் வலியுறுத்துகிறது.
உக்ரைனில் சிக்கியுள்ள ஏராளமான மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்களை, பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
உக்ரைனின் அண்டை நாடுகள் இந்தியர்களை அனுமதித்து, பாதுகாப்பாக தாயகத்திற்கு அனுப்பி வைப்பதற்கு, நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
போரை நிறுத்த கோரிக்கை
ஐ.நா., பொதுச் சபையில், 193 உறுப்பு நாடுகள் உள்ளன. இச்சபையின் சிறப்பு அவசர
கூட்டத்தில், ரஷ்யா உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்ற தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. இதை ஆதரித்து இந்தியா, உக்ரைன்,
ஆஸ்திரியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளின் துாதர்கள் பேசினர்.
உறுப்பு நாடுகளின் துாதர்கள் பேசி முடித்ததும், இவ்வார இறுதியில் தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடக்கும். இதில் தீர்மானம் வெற்றி பெற்றாலும், ரஷ்யாவை கட்டுப்படுத்தும் அதிகாரம் பொதுச் சபை தீர்மானத்திற்கு கிடையாது. ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்திற்கு மட்டுமே, அந்த அதிகாரம் உள்ளது.
Advertisement