பெல்ஜியம்: ரஷ்ய தாக்குதலால் தவிக்கும் உக்ரைனுக்கு ஃபைட்டர் ஜெட் விமானங்களை அனுப்ப ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் முன்வந்துள்ளன. இதனை ஐரோப்பிய ஒன்றிய கொள்கைகள் பிரிவு தலைவர் ஜோசப் போரெல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், நாங்கள் ஆயுதங்களைத் தாண்டி, ஃபைட்டர் விமானம் வரை உக்ரைனுக்குக் கொடுத்து உதவப் போகிறோம். ஒரு உக்கிரமான போரை எதிர்கொள்ளத் தேவையான அனைத்து விதமான ஆயுதங்களையும் உக்ரைனுக்கு அளிக்கவுள்ளோம் என்றார்.
முன்னதாக உக்ரனின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபாவும், ஐரோப்பிய யூனியன் நாடுகளிடம் நாங்கள் இயக்கக் கூடிய சில போர் விமானங்கள் இருக்கின்றன. அவற்றைக் கொடுத்து உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். அதனை ஏற்றுக் கொண்டு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஆயுதங்களையும் போர் விமானங்களையும் கொடுத்து உதவ முன்வந்துள்ளன.
கடந்த 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. தலைநகர் கீவ் உட்பட முக்கிய நகரங்களை ரஷ்ய ராணுவம் சுற்றி வளைத்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான போர் தீவிரமடைந்து வருகிறது.
போர் தீவிரமடைந்துள்ள சூழலில் பெலாரஸின் கோமெல் நகரில் ரஷ்யாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் ஒப்புக் கொண்டிருக்கிறது. இதனிடையே, சர்வதேச நீதிமன்றத்தில் ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் அரசு புகார் மனு அளித்துள்ளது.
ரஷ்யாவின் அணு ஆயுதங்களை கையாளும் படைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அந்தநாட்டு அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார். ரஷ்யாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக் கொண்டிருப்பதாக உக்ரைன் அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது. எனினும் எந்த இடத்தில், எப்போது பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்பது குறித்த தகவலை வெளியிடவில்லை. இந்த பேச்சுவார்த்தையைத் தான் உலகமே இப்போது உற்று எதிர்நோக்கிக் காத்திருக்கிறது.