உக்ரைனுக்கும் ரஷியாவுக்கும் இடையில் மோதல் உருவாகும் நிலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருந்தது. கடந்த மாதம் முதல் வாரத்தில் இருந்தே எந்த நேரத்திலும் ரஷியா உக்ரைன் மீது போர் தொடுக்க வாய்ப்புள்ளது என அமெரிக்கா எச்சரித்து வந்தது.
இதனால் சில நாடுகள் தங்களுடைய நாட்டு மக்களை உக்ரைனில் இருந்து வெறியேற உத்தரவிட்டது, தூதர்களும் அழைக்கப்பட்டனர். கடந்த மாதம் 23-ந்தேதி அமெரிக்க- ரஷிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. இந்த நிலையில்தான் 24-ந்தேதி ரஷியா போரை தொடங்கியது.
இதற்கிடையில் இந்தியர்களை வெளியேற்ற மத்திய அரசு தவறி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. ரஷியப் படைகள் முக்கிய நகரங்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதால் கீவ், கார்கீவ் போன்ற நகரங்களில் இந்தியர்கள், இந்திய மாணவர்கள் சிக்கித் தவிக்கிறார்கள். இன்று கார்கீவில் ஒரு மாணவர் கொல்லப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் மத்திய அரசு உக்ரைன் சூழ்நிலையை மதிப்பிடுவதில் தோற்றுவிட்டது என காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், இதுகுறித்து ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில் ‘‘உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதில் முறையான திட்டம் தீட்டுவதை விட, பா.ஜனதா அரசு தற்போது நடைபெற்று வரும் சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தில் மிகவும் அதிகமான ஆர்வம் காட்டியது.
சூழ்நிலை போருக்கு வழிவகுக்கும் என உலக நாடுகள் எதிர்பார்த்த நிலையில், இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளது வேதனையளிக்கிறது. மத்திய அரசு இந்திய பொறுப்பில் இருந்து எளிதாக தட்டிக் கழித்து செல்ல முடியாது. நமது மத்திய அரசு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததுடன், சட்டசபை தேர்தலுக்கான தீவிர பிரசாரத்தில் இருந்தது.
நாம் உளவுத்துறை, செயற்கைக்கோள், உக்ரைன், மாஸ்கே தூதரகத்தில் இருந்து தகவல்களை பெற்றோம். ஆனால், அரசு ஒன்றும் செய்யவில்லை. சூழ்நிலையை மதிப்பிடுவதில் தோல்வியடைந்து விட்டது. இன்னும் அதிக தீவிர செயல்பாடுடன் இருந்திக்க வேண்டும். ஒவ்வொரு இந்தியனும் பாதுகாப்பாக இந்தியா திரும்புவதை உறுதி செய்திருக்கனும்’’ என்றார்.
இதையும் படியுங்கள்… ஆபரேஷன் கங்கா திட்டம் – இந்தியர்களை மீட்க ஹங்கேரி புறப்பட்டார் மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரி