புதுடெல்லி:
ரஷியா நடத்தி வரும் போர் காரணமாக, உக்ரைனில் உள்ள மாணவர்கள் உள்பட இந்தியர்களை பத்திரமாக தாய் நாட்டிற்கு அழைத்து வரும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா தெரிவித்துள்ளதாவது:
உக்ரைன் தலைநகர் கீவ்- இல் இருந்து அனைத்து இந்தியர்களும் வெளியேறி விட்டனர். எங்களிடம் உள்ள தகவல் என்னவென்றால், இந்தியர்கள் யாரும் கீவ்-இல் இல்லை, யாரும் எங்களை தொடர்பு கொள்ளவில்லை.
எங்களது இந்தியர்கள் கீவ்-லிந்து வெளியே வந்துள்ளனர் என்பதை நாங்கள் நடத்திய அனைத்து விசாரணைகளும் வெளிப்படுத்துகின்றன.
இதுவரை அறுபது சதவீத இந்தியர் உக்ரைனை விட்டு வெளியேறியுள்ளனர். மீதமுள்ள 40 சதவீதம் பேரில், ஏறக்குறைய பாதி பேர் கார்வ்-வில் பகுதியில் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
உக்ரைனில் 20,000 இந்தியர்கள் சிக்கி இருக்கலாம் என கூறப்பட்ட நிலையில் 12,000 பேர் வெளியேறி விட்டனர் எனவும் உக்ரைனில் இருந்து தப்பிய சுமார் 1,700 இந்தியர்கள் போலந்து நாட்டில் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்டு வர அடுத்த சில நாட்களில் 26 விமானங்கள் இயக்கப்பட உள்ளதாகவும் இந்திய விமானப்படை விமானம் நாளை காலை 4 மணிக்கு ருமேனியா செல்கிறது என்றும் ஹர்ஷ வர்தன் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்… ஆபரேஷன் கங்கா திட்டம் – இந்தியர்களை மீட்கும் பணியில் இந்திய விமானப்படை விமானம்