புதுடெல்லி,
உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 6-வது நாளாக நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன.
அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ்- நகரையும் நெருங்கியுள்ள ரஷிய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
இதற்கிடையில், உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது. இந்த பணிகளை உக்ரைனில் இருந்து நேரடியாக செய்ய முடியாததால், அங்கு வசிக்கும் இந்தியர்கள் அண்டை நாடுகளுக்கு வெளியேற்றி, அங்கிருந்து விமானம் மூலம் தாய்நாடு அழைத்து வரப்படுகின்றனர்.
ஆபரேஷன் கங்கா என்ற பெயரில் இந்த மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. உக்ரைனின் அண்டை நாடுகளான போலந்து, ஹங்கேரி, ருமேனியா போன்ற நாடுகளில் இருந்து உக்ரைன் வாழ் இந்தியர்களுடன் அடுத்தடுத்து விமானங்கள் இந்தியா வந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பும் நடவடிக்கைகள் குறித்து மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, உக்ரைன் தலைநகர் கிவ் நகரில் இருந்து அனைத்து இந்தியர்களும் வெளியேறி விட்டனர் என்று அவர் தெரிவித்தார்.
உக்ரைனில் 20 ஆயிரம் இந்தியர்கள் சிக்கி இருந்ததாகவும், அதில் 60 சதவீதம் அதாவது 12 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் வெளியுறவுத்துறை செயலாளர் கூறியுள்ளார்.
எஞ்சிய 40 சதவீத பேரில் பாதி பேர் சண்டை நடைபெற்று வரும் கார்கிவ் நகரில் உள்ளதாகவும், எஞ்சிய 20 சதவீதம் பேர் உக்ரைனின் கிழக்கு எல்லை நோக்கி நகர்ந்து வந்துகொண்டிப்பதாகவும் அவர் கூறினார். கார்கிவ் நகரில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதே தற்போது மிகவும் முக்கியமான பணி என்றார்.