உக்ரைனில் நடந்து வரும் போர் காரணமாக இந்தியாவில் சூரிய காந்தி எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது.
உலகில் சூரிய காந்தி எண்ணெய் உற்பத்தியில் சுமார் 80% பங்கை உக்ரைன் வகிக்கிறது. உக்ரைனில் தற்போது போர் நடந்து வருவதால் அங்கிருந்து இந்தியா சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி செய்வது பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக சூரிய காந்தி எண்ணெயின் விலையும் அதிகரித்துள்ளது. குறிப்பாக உக்ரைனில் இருந்து வரும் சூரியகாந்தி எண்ணெயில் 65 சதவிகிதத்தை தென்னிந்தியாவே அதிகம் பயன்படுத்தும் நிலையில் விலையேற்றமும் இங்கு அதிகமாகவே உள்ளது.
சூரிய காந்தி எண்ணெய் விலை தற்போது 160 ரூபாய் என்ற அளவில் உள்ள நிலையில் போர் நீடித்தால் விலை 200 ரூபாய் வரை கூட உயர வாய்ப்புள்ளதாக வணிகர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏழை எளிய மக்கள் அண்மைக்காலமாக பாமாயிலையே அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது அதன் விலை உயர்ந்துள்ள நிலையில், அதன் தொடர்ச்சியாக சூரியகாந்தி எண்ணெயும் விலை உயர்ந்துள்ளது சாமானியர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. உக்ரைன் பிரச்னை நீடித்தால் சூரியகாந்தி எண்ணெய் தவிர மற்ற சமையல் எண்ணெய் விலைகளும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக வணிகர்கள் கூறுகின்றனர்.
சமையல் எண்ணெய் தேவைக்கு பெரும்பாலும் வெளிநாடுகளையே இந்தியா சார்ந்துள்ளதே தற்போதைய பிரச்னைகளுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. சூரியகாந்தி எண்ணெய் தட்டுப்பாட்டை சமாளிக்க அர்ஜென்டினா உள்ளிட்ட நாடுகளிடமிருந்து அதை இறக்குமதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
மேலும் உள்நாட்டில் சோயா எண்ணெய், அரிசி உமி எண்ணெய் உள்ளிட்ட சமையல் எண்ணெய் வகைகளின் உற்பத்தியை அதிகரிக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தவிர நீண்டகால நோக்கில் இந்தியாவில் எண்ணெய் வித்து உற்பத்தியை அதிகரிப்பதற்கான திட்டமும் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் நடவடிக்கைகள் சமையல் எண்ணெய் விலை உயர்விலிருந்து சாமானியர்களை காக்கும் என நம்பலாம்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM