சென்னை: உயர்நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் டி.என்.பி.எஸ்.சி செயல்படுவதா? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய முதல் தொகுதி முதல் நிலைத் தேர்வுகளில் கேட்கப்பட்ட தவறான வினாக்களால் பாதிக்கப்பட்ட மாணவர்களை முதன்மைத் தேர்வில் பங்கேற்க அனுமதிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் கூட, அதை மதித்து செயல்படுத்த டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் மறுத்திருக்கிறது. நூற்றுக்கணக்கான போட்டித் தேர்வர்களின் வாழ்க்கையை சூனியமாக்கும் வகையிலான பணியாளர் தேர்வாணைய நிர்வாகத்தின் முடிவு கண்டிக்கத்தக்கதாகும்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் போட்டித் தேர்வர்கள் நலனில் அக்கறையில்லாத போக்காலும், தொலைநோக்குப் பார்வையின்மையாலும் முதல் தொகுதி தேர்வு எழுதும் மாணவர்கள் இரு வகைகளில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இது தொடர்பாக தேர்வாணையத்தின் அதிகாரிகளுக்கு நினைவூட்டியும் கூட, தவறுகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க மறுக்கும் போக்கை ஏற்றுக்கொள்ள முடியாது.
தமிழ்நாடு அரசுத் துறைகளுக்கு 18 மாவட்ட துணை ஆட்சியர்கள் உள்ளிட்ட 66 பேரை தேர்ந்தெடுக்க 2020-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அறிவிக்கப்பட்ட முதல் தொகுதி பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வுகள் அதே ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் நடத்தப்பட்டன. அதன் திருத்தப்பட்ட முடிவுகள் பல்வேறு குழப்பங்களுக்குப் பிறகு கடந்த திசம்பர் 14-ஆம் தேதி வெளியிடப்பட்டன. அதன்படி முதல் நிலைத் தேர்வில் வெற்றி பெற்ற தேர்வர்கள், முதன்மைத் தேர்வில் பங்கேற்பதற்கான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய கடந்த ஜனவரி மாதம் 5-ஆம் தேதி தான் கடைசி நாள் என்று தேர்வாணையம் அறிவித்திருந்தது.
முதல் நிலைத் தேர்வில் சில வினாக்கள் தவறாக கேட்கப்பட்டிருந்ததால், அவற்றுக்கும் மதிப்பெண் வழங்கி தங்களையும் முதன்மைத் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று கோரி பெருமளவிலான தேர்வர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அந்த வழக்கில் ஜனவரி 4-ஆம் தேதி இடைக்காலத் தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம், தவறான வினாக்களால் பாதிக்கப்பட்ட தேர்வர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவும், முதன்மைத் தேர்வில் பங்கேற்கவும் ஆணையிட்டது. அவர்களின் தேர்ச்சி இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு உட்பட்டது என்றும் நீதிமன்றம் கூறியிருந்தது.
ஆனால், பாதிக்கப்பட்ட மாணவர்கள் அவர்களின் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்தும் கூட, அவர்களை முதன்மைத் தேர்வில் பங்கேற்க தேர்வாணையம் அனுமதிக்கவில்லை. இந்த விஷயத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மீண்டும் நீதிமன்றத்தை அணுகுவதற்கு கூட வாய்ப்பளிக்காமல், முதன்மைத் தேர்வுகள் வரும் மார்ச் 4-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை நடைபெறும் என்று தேர்வாணையம் அறிவித்துள்ளது. இது சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை அப்பட்டமாக மீறும் செயலாகும். இதனால், நூற்றுக்கணக்கான போட்டித் தேர்வர்கள் முதன்மைத் தேர்வில் பங்கேற்று பணிக்கு செல்லும் வாய்ப்பை இழக்கிறார்கள்.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் முதன்மைத் தேர்வை எழுதினால் கூட, அவர்களின் முடிவுகள் அறிவிக்கப் படாது; அது வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டது என்று உயர்நீதிமன்றம் இடைக்காலத் தீர்ப்பில் தெரிவித்திருக்கிறது. இதை செயல்படுத்துவதால் யாருக்கும், எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனாலும், அரசுப் பணியாளர் தேர்வாணையம் அதன் சமூகநீதிக்கு எதிரான நிலைப்பாடு காரணமாகவும், அதன் தவறு அம்பலப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும் அவர்களை தேர்வெழுத அனுமதிக்க மறுக்கிறது.
மற்றொருபுறம், முதல் தொகுதி பணிகளுக்கான முதன்மைத் தேர்வு மார்ச் 4 முதல் 6 வரை நடைபெறும் என்று தமிழக அரசு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பதற்கு முன்பாகவே, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இந்திய வனப்பணிக்கான முதன்மைத் தேர்வுகள் பிப்ரவரி 27 முதல் மார்ச் 7 வரை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு, அதன்படி தேர்வுகளும் நடைபெற்று வருகின்றன. இதைக் கருத்தில் கொள்ளாமல் வனப் பணி தேர்வுகள் நடைபெறும் அதே காலத்திலேயே முதல் தொகுதிக்கான முதன்மைத் தேர்வை டி.என்.பி.எஸ்.சி நடத்துவதால், தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள், இந்த இரு தேர்வுகளில் ஒன்றை மட்டும் தான் எழுத முடியும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தவறுக்கு போட்டித் தேர்வர்கள் தண்டனை அனுபவிக்கக்கூடாது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தவறால், போட்டித் தேர்வர்கள் இரு வழிகளிலும் பாதிக்கப்படுவதைத் தடுக்க வரும் 4&ஆம் தேதி தொடங்கவுள்ள முதல் தொகுதி முதன்மைத் தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒத்தி வைக்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி, தவறான வினாக்களால் பாதிக்கப்பட்ட மாணவர்களை முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கும் விஷயத்தில் சாதகமான முடிவை எடுத்து, அவர்களும் தேர்வு எழுதும் வகையில் இன்னும் சில வாரங்கள் கழித்து முதல் தொகுதி முதன்மைத் தேர்வுகளை நடத்த பணியாளர் தேர்வாணையம் முன்வர வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.