Ukraine Russia war top 5 developments: உக்ரைன் மீது ரஷ்ய இன்று 6ஆவது நாளாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ரஷ்ய தாக்குதல்களை அதிகரிக்கப் போவதாக அறிவித்துள்ளது.
உக்ரைன் – ரஷ்யா இடையேயான நேற்றை அமைதி பேச்சு வார்த்தையில், எந்த வித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், இன்று ரஷ்யா தனது தாக்குதல்களை அதிகப்படுத்தியுள்ளது.
நிர்வாக கட்டிடம், குடியிருப்புகள் மீது ரஷ்ய ஏவுகணை தாக்குதல்
கார்கிவ் பிராந்தியத் தலைவர் Oleg Synegubov கூறுகையில், உக்ரைனின் 2ஆவது மிகப்பெரிய நகரமான கார்கிவ்வில் உள்ள நிர்வாக கட்டிடங்கள், குடியிருப்புகள் மீது ரஷ்ய ஏவுகணை தாக்குதல் நடத்தியது. GRAD மற்றும் க்ரூஸ் ஏவுகணைகளை ரஷ்யா ஏவியது. இத்தகைய தாக்குதல்கள் உக்ரேனிய மக்களின் இனப்படுகொலை, பொதுமக்களுக்கு எதிரான போர்க்குற்றமாகும் என்றார். பொதுமக்கள் இருந்த கட்டிடங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உக்ரைனில் உள்ள கார்கிவ் நகரம் ரஷியாவின் எல்லைக்கு மிக அருகாமையில் இருக்கும் பகுதியாகும். அங்கு பெருமளவில் ரஷிய படைகள் நுழைந்து தாக்குதலை தொடங்கிவிட்டன. முன்னதாக இன்று உக்ரைனின் தலைநகர் கீவில் உள்ள கோபுரங்களை ரஷிய படைகள் குண்டு வைத்து தகர்த்தன.
ஒக்திர்கா நகரில் உள்ள ராணுவ தளத்தை ரஷ்ய பீரங்கிகள் தாக்கியதில் 70க்கும் மேற்பட்ட உக்ரேனிய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியானது.
கார்கிவ் ஷெல் தாக்குதலில் இந்திய மாணவர் உயிரிழப்பு
இன்று காலை கார்கிவ் நகரில் நடைபெற்ற ஷெல் தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்ததாக எம்.இ.ஏ செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், “இன்று காலை கார்கிவ் நகரில் இந்திய மாணவர் ஒருவர் ஷெல் தாக்குதலில் உயிரிழந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் உறுதிப்படுத்துகிறோம். குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்,” என்று பதிவிட்டுள்ளார். இவர் கர்நாடகாவை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உக்ரைன் அதிபர் உரை
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய விருப்பம் தெரிவித்து, நேற்று அதற்கான விண்ணப்பத்தில் கையெழுத்திட்ட உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி, இன்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் காணொலி வாயிலாக உரையாற்றினார்.
இதையும் படியுங்கள்: உக்ரைன் போர் வீடியோ… சரணடையாமல் போராடும் வீரர்கள்
அப்போது பேசிய அவர், கார்கிவ் மத்திய சதுக்கத்தில் ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதல் வெளிப்படையான பயங்கரவாதம். ரஷியா ஒரு பயங்கரவாத நாடாக மாறி உள்ளது. ரஷிய ஷெல் தாக்குதல் ஒரு ‘போர் குற்றம்’. நாங்கள் பலமாக இருக்கிறோம். எங்களை யாரும் உடைக்க முடியாது. எங்கள் நகரங்கள் முற்றுகையிடப்பட்டாலும் நிலம், சுதந்திரத்திற்காக போராடுகிறோம். நீங்கள் உக்ரைனுடன் இருப்பதை நிரூபிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்திடம் ஜெலென்ஸ்கி அழுத்தமாக தெரிவித்தார்.
கீவ் நகரை விட்டு வெளியேறுங்கள்; தாக்குதலை அதிகரிக்கப் போவதாக ரஷ்யா எச்சரிக்கை
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், கீவ் குடியிருப்பாளர்களை வெளியேறுமாறு எச்சரித்துள்ளது. செவ்வாயன்று வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், பாதுகாப்பு அமைச்சகம், “உக்ரைனின் பாதுகாப்பு சேவை (SBU) மற்றும் 72 வது தகவல் மற்றும் உளவியல் நடவடிக்கைகளுக்கான மையம் (PSO)” ஆகியவற்றிற்கு எதிராக “உயர் துல்லியமான தாக்குதல்களை” நடத்த ரஷ்யா தயாராகி வருவதாகக் கூறியது. “ரஷ்யாவிற்கு எதிரான ஆத்திரமூட்டல்களில் உக்ரேனிய தேசியவாதிகளால் ஈடுபட்டுள்ள உக்ரேனிய குடிமக்களையும், ரிலே நிலையங்களுக்கு அருகில் வசிக்கும் கீவ் குடியிருப்பாளர்களையும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
SWIFT இலிருந்து முக்கிய ரஷ்ய வங்கிகளை நீக்கியது ஐரோப்பிய ஒன்றியம்
ஐரோப்பிய ஒன்றியம் முக்கிய ரஷ்ய வங்கிகளை SWIFT இலிருந்து துண்டித்துள்ளது. “ரஷ்யா மற்றும் புதினின் போரை நிறுத்த” ரஷ்யாவின் மத்திய வங்கியின் பரிவர்த்தனையையும் தொழிற்சங்கம் தடை செய்யும் என்று ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் கூறினார். இதற்கிடையில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை வழக்கறிஞர், உக்ரைனில் சாத்தியமான போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து விரைவில் விசாரணையைத் தொடங்குவதாகக் கூறினார்.