எங்களின் ஒற்றுமையை யாராலும் உடைக்க முடியாது என, ஐரோப்பிய கூட்டமைப்பு நாடாளுமன்றத்தில், உக்ரைன் நாட்டு அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த ஆறு மாதங்களாக பதற்றம் நீடித்து வந்தது. இதை அடுத்து அண்மையில் உக்ரைன் நாட்டின் மீது படையெடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அதிரடியாக உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, கடந்த ஆறு நாட்களாக, உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ், கார்கிவ் உள்ளிட்ட இடங்களில், ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. ரஷ்யப் படைகளின் தாக்குதலுக்கு உக்ரைன் நாட்டு ராணுவத்தினரும் பதிலடி கொடுத்து வருகின்றன.
உக்ரைன் நாட்டில் ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில் இதுவரை, 200-க்கும் மேற்பட்ட பொது மக்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. இதே போல், உக்ரைன் ராணுவம் கொடுத்த பதிலடியில், 5,000 ரஷ்ய வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் நடத்தி வரும் தாக்குதல் சர்வதேச அரங்கில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இன்று, ஐரோப்பிய கூட்டமைப்பு நாடாளுமன்றத்தில், உக்ரைன் நாட்டு அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி காணொலி வாயிலாக பேசியதாவது:
ரஷ்ய கூட்டமைப்பு ஐந்தாவது நாளாக முழு அளவிலான தாக்குதலை உக்ரைன் மீது நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் ஆயிரக்கணக்கான உக்ரைன் மக்கள் பலியாகி உள்ளனர். மக்களில் சிலருக்கு இந்த நாள் நல்ல நாளாக இல்ல. சிலருக்கு இந்த நாள்தான் கடைசி நாளாக உள்ளது. சுதந்திரமாகவும், சமத்துவமாகவும் வாழ வேண்டும் என்பதற்காக உக்ரைன் மக்கள் உயிரைத் தியாகம் செய்து வருகின்றனர்.
உக்ரைனில் இந்திய மாணவர் உயிரிழந்தது எப்படி? – வெளியானது தகவல்!
ஐரோப்பியாவில் மிகப்பெரிய கொண்டாட்டங்கள் நடைபெறும் கீவ் நகரிலுள்ள சுதந்திர சதுக்கத்தின் மீது ரஷ்ய ராணுவத்தினர் இன்று இரு ஏவுகணைகளை வீசியதில், நூற்றுக்கணக்கானோர் பலியாகி உள்ளனர். எங்கள் மண்ணுக்காக, சுதந்திரத்திற்காக உக்ரைன் மக்கள் உயிர்களை தியாகம் செய்து வருகின்றனர். உக்ரைனின் அனைத்து நகரங்களும் யாரும் நுழையாதபடி தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. யாராலும் எங்கள் ஒற்றுமையை உடைக்க முடியாது. ஐரோப்பிய கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதன் மூலம் மேலும் பலம் பெறும்.
இவ்வாறு அவர் பேசினார்.
உக்ரைன் நாட்டு அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி பேச்சுக்கு ஐரோப்பிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் எழுந்து நின்று கைத் தட்டினர்.