சென்னை
தமது ரத்தம் தமிழக மண்ணில் கலந்துள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் எழுதிய உங்களில் ஒருவன் என்னும் தன் வரலாற்று நூல் முதல் பாகம் வெளியிடப்பட்டது. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடந்த இந்த புத்தக வெளியீட்டு விழாவில் புத்தகத்தைக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டார். முதல் பிரதியைத் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பெற்றுக் கொண்டார்.
விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாகக் கேரள முதல்வர் பினராயி விஜயன், காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, பீகார் மாநில எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ், கவிஞர் வைரமுத்து நடிகர் சத்யராஜ், டி ஆர் பாலு, கனிமொழி உள்ளிடோர் பங்கேற்றனர்.
இந்த விழாவில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,
“முதல்வர் மு க ஸ்டாலின் தமது இளமைத் தோற்றத்தை பற்றி இன்னொரு புத்தகம் எழுத வேண்டும். அதில் அவரது இளமையின் ரகசியத்தைச் சொல்ல வேண்டும்.
தமிழக மண்ணில் எனது ரத்தம் கலந்துள்ளது. எனவே நானும் தமிழன் என்கிறேன். எனவே என்னைத் தமிழன் என அழைக்க எனக்கு எல்லா உரிமையும் உள்ளதையும் நான் உணர்கிறேன். ஆனால் என்னை ஏன் நீங்கள் தமிழன் என அழைப்பதில்லை? நான் தமிழக வரலாற்றுப் பாரம்பரியத்துக்கு தலை வணங்குபவனாகவே தமிழகத்துக்கு வருகின்றேன்.
அதே வேளையில் பிரதமர் மோடி தமிழக வரும் போதெல்லாம் தாம் பேசுவதன் பொருள் புரியாமல் ஏதோ பேசுகிறார். அவரால் எதையும் புரிந்து கொள்ளாமல் எப்படி தமிழகத்தை பற்றிப் பேசுகிறார்? பாஜகவினர் தமிழகத்தின் வரலாறு மட்டுமில்லை. இந்தியாவின் வரலாற்றையும் தெரிந்து கொள்ளாமல் உள்ளனர்.
எந்த ஒரு மாநிலத்தைப் பற்றியும் புரிந்து கொள்ளாத தன்மையில் தான் பிரதமர் மோடி இருக்கிறார். பாஜகவினர் கற்பனையான உலகில் வாழ்கின்றனர். எங்களுக்கு அவர்களை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது நன்கு தெரியும்”
எனத் தெரிவித்துள்ளார்.