புதுடில்லி: உக்ரைனில் சிக்கி உள்ள மாணவர்களின் பெற்றோர்கள் பல எம்.பி.,க்களை தொடர்பு கொண்டு உதவி கோரும் நிலையில், அமைச்சகத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் சிக்கி உள்ள மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்களை மீட்பதற்காக ‘ஆபரேசன் கங்கா’ திட்டத்தை துவக்கி உள்ள மத்திய அரசு, இதற்காக உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு மத்திய அமைச்சர்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், எம்.பி.,க்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளதாவது: அனைத்து தகவல்கள் மற்றும் விசாரணைகள் குறித்து நாங்கள் அறிந்து வைத்துள்ளோம் என்பதை உங்களிடம் உதவி கோருபவர்களிடம் தெரிவியுங்கள். அனைவரின் கவலைகள் குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக குழுவினர் தெரிந்து வைத்துள்ளனர். உக்ரைனில் உள்ள இந்தியர்கள் மற்றும் மாணவர்களின் குடும்பத்தினரிடம் இருந்து புகார்கள் உங்களுக்கு வந்த வண்ணம் உள்ளது.
அவர்களுக்கு உதவி செய்வதற்காக உதவி மையத்தை வெளியுறவுத்துறை அமைச்சகம் அமைத்துள்ளது. இந்தியர்கள் எந்த எல்லை நோக்கி செல்கிறார்கள் என்பதை பொறுத்து அதற்கு ஏற்றவாறு, ருமேனியா, போலந்து, ஹங்கேரி மற்றும் ஸ்லோவேகியா நாடுகளில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர், வாட்ஸ் ஆப் மற்றும் இமெயில் முகவரிகளையும் குறிப்பிட்டுள்ளார்.
Advertisement