உக்ரைனின் சாபோரிஸியாவில் உள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய அணு மின் நிலையத்தை ரஷ்யா நெருங்கும் நிலையில், அந்நாட்டில் உள்ள அணு மின் நிலையங்களை சுற்றி பாதுகாப்பு மண்டலம் அமைக்க உக்ரைன் வேண்டுகோள் விடுத்துள்ளது.
உக்ரைனில் உள்ள அணு மின் நிலையங்களில் சுமார் 15 அணு உலைகள் உள்ள நிலையில், ரஷ்யாவின் தொடர் தாக்குதலால் அதன் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உடனடியாக இவ்விவகாரத்தில் தலையிட்டு அணு உலைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய உக்ரைனின் அணுசக்தி பயன்பாட்டு அமைப்பின் தலைவர் சர்வதேச அணுசக்தி முகமைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதனை அடுத்து, நாளை அவசர கூட்டத்தை கூட்ட உள்ளதாக அறிவித்த அந்த முகமை, அணு மின் நிலையங்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், அது பொது சுகாதாரத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.