ஜெனிவா: உக்ரைன் விவகாரம் தொடர்பாக விவாதிக்க ஐ.நா. பொதுச்சபை அவசரக் கூட்டத்தைக் கூட்டுவது தொடர்பான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் அவசரக் கூட்டத்தை நேற்று கூட்ட முடிவு செய்யப்பட்டது. 1950-ம்ஆண்டுக்குப் பின் ஐ.நா. பொதுச் சபையின் அவசரக்கூட்டம் கூட்டப்படுவது இது 11வது முறை.
முன்னதாக, அவசரக் கூட்டத்தைக் கூட்டுவது தொடர்பான ஐ.நா. பாதுகாப்பு சபை சார்பில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது. வாக்கெடுப்பை புறக்கணிப்பது தொடர்பாக ஐ.நா.சபையின் இந்திய பிரதிநிதி டி.எஸ். திருமூர்த்தி கூறியதாவது:
உக்ரைன் நிலவரம் மிகவும்மோசமடைந்துள்ளது வேதனைக்குரியது. இந்த நேரத்திலும் கூடபேச்சுவார்த்தைக்குத் திரும்புவதைத் தவிர வேறு வழியில்லை. உடனடியாக வன்முறையை விடுத்து, வெறுப்புகளுக்கு முடிவு கட்டுங்கள். எங்கள் பிரதமர் மோடி ஏற்கெனவே ரஷ்ய அதிபர் மற்றும் உக்ரைன் அதிபரிடம் இது தொடர்பாக வலியுறுத்தியுள்ளார்.
மேலும் உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையுடன் இருக்கிறோம். இது மனிதாபிமான அடிப்படையில் உடனே மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுநாங்கள் வாக்களிப்பதிலிருந்து விலகி இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.