உள்ளாட்சிப் பதவிகளுக்கான தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்ந்தெடுப்பது குறித்து கூட்டணி கட்சிகளுடன் இடப்பங்கீடு பேச்சுவார்த்தை அமைச்சர் கே.என் நேரு தலைமையில் நடைபெற்றது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அமைச்சர் கே.என் நேருவின் இல்லத்தில், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தை கட்சி, மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கூட்டணி கட்சி பிரதிநிதிகளுடன் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இடப்பங்கீடு குறித்த இந்தப் பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் சார்பில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருமாவளவன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவஹிருல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இடப்பங்கீடு குறித்த ஒப்பந்தத்தில், திமுக கூட்டணி கட்சிகள் கையெழுத்திட்டதாகவும், திமுக தலைமை முழுப் பட்டியலையும் நாளை வெளியிட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி ஆனது 21 மாநகராட்சியையும் கைப்பற்றியது.
மொத்தமுள்ள 138 நகராட்சிகளில் 132 நகராட்சிகளை திமுக கூட்டணி கைப்பற்றியது. 489 பேரூராட்சிகளில் 435 பேரூராட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், கூட்டணி கட்சிகள் தாங்கள் வெற்றி பெற்ற இடத்தில் மேயர், துணை மேயர் மற்றும் பேரூராட்சி நகராட்சி தலைவர் துணைத் தலைவர் ஆகிய பதவிகளை கேட்பதாக கூறப்படுகிறது.
விடுதலை சிறுத்தை கட்சி கேட்ட இடங்கள் அதிகம் என்றாலும், பேச்சுவார்த்தை திருப்தியாக இருந்ததாக, அந்தக் கட்சியின் தலைவர் திருமாவளவன் நம்பிக்கை தெரிவித்தார். இதேபோல், கடலூர் மாநகராட்சியின் துணை மேயர் பதவியை, தமிழக வாழ்வுரிமை கட்சி கேட்டு இருப்பதாகவும், இது குறித்து நல்லதொரு முடிவை கட்சியின் தலைமையுடன் ஆலோசித்து தெரிவிப்பதாக குழுவில் இடம்பெற்ற திமுக நிர்வாகிகள் கூறியுள்ளார்கள்.
– சுபாஷ் பிரபுSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM