புதுடில்லி: ”அடிப்படை கட்டமைப்பு வசதிகளை விரைவாக மேற்கொண்டு செலவை மிச்சப்படுத்த, ‘கதி சக்தி’ எனப்படும் அதி விரைவு ஒருங்கிணைப்பு திட்டம் உதவும்,” என, பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.
வரும் நிதியாண்டு பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் ‘கதி சக்தி’ திட்டத்தின் சாதக அம்சங்கள் தொடர்பாக, பிரதமர் மோடி ‘வெபினார்’ எனப்படும் இணையவழி கருத்தரங்கில் பேசியதாவது: அடிப்படை கட்டமைப்பு வசதிகளை திட்டமிடுதல், செயல்படுத்துதல், கண்காணித்தல் ஆகியவை, புதிய பாதையில் நடைபோட கதி சக்தி திட்டம் உதவும். 21ம் நுாற்றாண்டின் வளர்ச்சியை குறிவைத்து பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்திய பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்தி, புதிய வேலை வாய்ப்புகள் பலவற்றை உருவாக்க, இந்த பட்ஜெட் உதவும்.
வழக்கமான நடைமுறையில், அரசு துறைகளிடையே ஒருங்கிணைப்பு இல்லாததால், திட்டங்கள் முடிவடைவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலை, கதி சக்தி திட்டத்தால் மாறியுள்ளது. தற்போது, அனைத்து தகவல்களையும் அறிந்து, அதற்கேற்ப திட்டங்களை வகுத்துக் கொள்ள முடியும். கடந்த, 2013 – 14ம் நிதியாண்டில், அரசின் நேரடி மூலதனச் செலவு, 2.50 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இது, 2022 – 23ம் நிதியாண்டில், 7.50 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுஉள்ளது. கூட்டாட்சி தத்துவத்தை வலுப்படுத்தும் வகையில், அனைத்து மாநிலங்களுக்கும் அடிப்படை கட்டமைப்பு திட்டங்களுக்கு, பட்ஜெட்டில், 1 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுஉள்ளது.
கதி சக்தி திட்டத்தில், 400க்கும் மேற்பட்ட தரவு வரிசைகள் ஒன்றிணைக்கப்பட்டு உள்ளன. இதன் வாயிலாக வன நிலம், தொழிற்பேட்டை நில விபரங்கள் உட்பட, தற்போதைய கட்டமைப்பு திட்டங்கள் மட்டுமின்றி, எதிர்கால திட்டங்கள் குறித்த தகவல்களையும் சுலபமாக அறிந்து கொள்ளலாம். இதனால், தொழில் துவங்குவது தொடர்பான பணிகளின் சுமை வெகுவாக குறையும். ஆறு அமைச்சகங்களின், 24 ‘டிஜிட்டல்’ பணிகள், ஒருங்கிணைந்த சரக்கு போக்குவரத்து தளத்துடன் இணைக்கப்பட்டுஉள்ளன. இதனால், சரக்கு போக்குவரத்து செலவு மிகவும் குறையும். இவ்வாறு அவர் பேசினார்.
Advertisement