காலத்தால் அழியாத காவியப் படைப்புகளை தந்த ஏழிசை மன்னர் எம்.கே.டி. பிறந்தநாள் கொண்டாட்டம்

தமிழ்த்திரையுலகின் எவர் க்ரீன் சூப்பர் ஸ்டார், ஏழிசை மன்னர் தியாகராஜ பாகவதரின் 112 ஆவது பிறந்த நாளான இன்று அவரது நினைவலைகளில் சற்று நீராடலாம்.

மன்மத லீலையை வென்றார் உண்டோ, இப்படி காலத்தால் அழியாத பாடல்களையும், வருடக்கணக்கில் திரையரங்கில் ஓடிய காவிய படங்களிலும் நடித்தவர் ஏழிசை மன்னர் எம்.கே.டி. 7 வயதிலேயே நாடகக்குழுவில் இணைந்து கலக்கியவர். எளிய குடும்பத்தில் பொற்கொல்லரின் மகனாக பிறந்தாலும், தமது கலைத்திறனால் கோலோச்சியவர். தமிழ்த்திரையுலகில் நட்சத்திர அந்தஸ்து பெற்ற முதல் நாயகன்.

மாயவரம் கிருஷ்ணசாமி தியாகராஜ பாகவதர். சுருக்கமாக எம்.கே.டி. அந்தக்கால காதல் மன்னன். ஒருசாராரின் ரசனைக்குரியதாக இருந்த திரைத்திரையுலகை மடைமாற்றிய வெகுஜன கலைஞன். 1934 ஆம் ஆண்டு வெளியான ‘பவளக்கொடி’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் கால்பதித்தவர். இந்த படத்தில் 60 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. தியாராஜ பாகவதர் நடித்தது 14 படங்கள் மட்டுமே. அத்தனையும் சூப்பர் ஹிட். 1944 ஆண்டு வெளியான ’ஹரிதாஸ்’ திரைப்படம் தமிழ்திரையுலகம் கண்டிராத சாதனைகளை நிகழ்த்தியது.

image

சென்னை ப்ராட்வே திரையரங்கில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஓடியது. ’நவீன சாரங்கதாரா‘, ’சத்தியசீலன்‘ போன்ற படங்களும் வசூல் வேட்டை நடத்தின. ‘சிந்தாமணி’ என்ற திரைப்படத்தில் கிடைத்த லாபத்தை கொண்டு மதுரையில் சிந்தாமணி என்ற திரையரங்மே கட்டப்பட்டது. பூமியில் மானிட ஜென்மம், சொப்பன வாழ்வில் மகிழ்ந்து, வதனமே சந்திர பிம்பமோ, கிருஷ்ணா முகுந்தா முராரே போன்ற பாடல்கள் இன்றும் ரசிகர்களின் மனம் கவர்ந்தவையாக உள்ளன.

வெற்றியின் உச்சத்தில் இருந்த பாகவதரின் கடைசிக் காலம் அவ்வளவு எளிமையாக இருந்து விடவில்லை. லக்ஷ்மிகாந்தன் என்ற பத்திரிகையாளர் கொல்லப்பட்ட வழக்கில் சிக்கி ஆயுள் தண்டனை பெற்றார். பின்னர் மேல்முறையீடு செய்து பாகவதர் விடுதலையானார். சர்க்கரை நோய் உள்ளிட்ட உபாதைகளால் அவதிப்பட்டு வந்த தியாகராஜ பாகவதர், 1959 ஆண்டு தமது 49 வயதிலேயே காலமானார்.

image

பூமியில் 50 ஆண்டுகள் கூட வாழாத தியாகராஜ பாகவதர் ரசிகர்களின் மனதில் இன்றளவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். எம்.கே.தியாகராஜ பாகவதரின் 112வது பிறந்தநாளை முன்னிட்டு நாமக்கல்லில் அவரது திருஉருவ படத்திற்கு தீபாராதனை காட்டியும் மலர்தூவியும் ரசிகர்கள் மரியாதை செலுத்தினர். மோகனூர் சாலை பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருஉருவ படத்திற்கு அவரது ரசிகர்கள் மரியாதை செலுத்தினர். அவரது காவிய பாடல்களையும் ரசித்து சிலாகித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.