மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய தலைமுறைக்கு பிரத்யேக பேட்டியளித்தார். அப்போது உக்ரைன் விவகாரம், கிரிப்டோகரன்சி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார்.
உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களை மீட்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
வெளியுறவுத்துறை அமைச்சர் தனிப்பட்ட முறையில் அதனை கண்காணித்து வருகிறார். பிரதமர் மோடி கிட்டத்தட்ட 4 முறை ஆலோசனை நடத்தியுள்ளார். உக்ரைன் ஒரு பெரிய நாடு. உக்ரைனின் மேற்கு பகுதியில் யுத்தம் அதிக அளவில் இல்லை. அதனால் அந்தப் பகுதியில் உள்ளவர்கள் பெரிய அளவில் இடைஞ்சல் இல்லாத அளவிற்கு மீட்கப்படுகிறார்கள் . முழுச் செலவையும் இந்திய அரசாங்கம்தான் ஏற்கிறது. ஆனால் கிழக்குப் பகுதியில் யுத்தம் நடக்கிறது. அதனால் அங்குள்ளவர்களை அழைத்துவருவதில் சிறிது தாமதம் இருக்கிறது. அத்தனை பேரையும் பத்திரமாக மீட்பதற்கு அனைத்து நாடுகளுடனுமே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
போர் அபாய சூழல் வளர்ச்சியை தடுக்குமா?
போர் மூலமாக நடக்கின்ற பாதகங்கள் நிச்சயம் வளர்ச்சியை தாக்கும். எண்ணெய் விலைகள் என்னவாகுமா? விநியோகம் பாதிக்கப்படும்போது நிச்சயம் தேவை அதிகரிக்கும். சூரிய காந்தி எண்ணெய் பெருமளவில் அங்கு இருந்துதான் வருகிறது. இதனால் வருகின்ற ஆறு அல்லது ஏழு மாதங்களில் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும்.
கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருக்கிறது. மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை நாடு சந்திக்க வேண்டியிருக்கிறதா?
அதை இப்போது சொல்ல முடியாது. எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் இனிமேல் உயர்வை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொல்லும் நிலை வந்தால், அப்போது வேண்டுமானால் அரசாங்கம், கொடுக்க வேண்டிய வரியை குறைத்துக்கொள்ளுங்கள் என சொல்லலாம். மத்திய அரசு முழுமையாக வரியை குறைத்தாலும்கூட மாநில அரசுகள்கூட வரி போடுகின்றன.. அவர்களின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்? இதுபற்றி யோசித்துதான் முடிவெடுக்க முடியும்.
கூடங்குளம் ஆலைக்கும் ரஷ்யாவின் தொழில்நுட்பம் தேவைப்படுகிறது. போர்ச்சூழலால் ஏதேனும் பாதிப்பு உண்டாகுமா?
அதனால்தான் இதுதொடர்பாக பிரதமரே ஆலோசனை நடத்தினார். ஒவ்வொரு துறை சார்பாகவும் என்ன மாதிரியாக சவால் இருக்கும் என்பதை பிரதமர் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்.
கிரிப்டோகரன்சி சட்டப்பூர்வமானதா? இல்லையா?
முதலில் அது கரன்சியே இல்லை. கரன்சி என்பது மத்திய அரசு மூலமாகவே அல்லது ரிசர்வ் வங்கி மூலமாகவே வழங்குவதுதான் கரன்சி ஆகும். ஒரு குறிப்பிட்ட தொழில்நுட்பம் மூலமாக ஒரு மதிப்பு இருக்கும் பொருளை உற்பத்தி செய்கிறார்கள். அதை ஒருவர் வாங்குகிறார். மற்றொருவர் விற்கிறார். இது கரன்சி அல்ல. இது ஒருவகையான சொத்து. எந்தவொரு பரிமாற்றம் மூலம் நீங்கள் பணம் பெறுகிறீர்கள் என்றால் அதற்கு வரி விதிக்க அரசுக்கு அதிகாரம் இருக்கு. அது சட்டப்பூர்வமானதா, இல்லையா என்பதை இப்போது சொல்ல முடியாது. ஆலோசனைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதன்பின்புதான் முழு நிலவரம் தெரியவரும்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் முழு பேட்டியை காண…
<iframe width=”640″ height=”360″ src=”https://www.youtube.com/embed/DyK1QZtEa8w” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture” allowfullscreen></iframe>Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM