புதுடெல்லி: உக்ரைனில் குண்டுவீச்சு தாக்குதலில் இந்திய மாணவர் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கீவ் நகரில் குடியிருப்புப் பகுதிகள் மீது ரஷ்ய விமானப்படை கொத்துக் குண்டு வீச்சு நடத்தி வருகிறது. உக்ரைனின் வடகிழக்கில் அமைந்துள்ள கார்கிவ் நகரத்தை ரஷ்யப் படைகள் தொடர்ச்சியாக பீரங்கி, ஏவுகணை மற்றும் வான்வழி குண்டுவீச்சி தாக்கி வருகிறது.
கார்கிவ் நகரில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் அதுபோலவே தலைநகர் கீவ் நகரிலும் ரஷ்ய படைகளின் தாக்குதல் அதிகரித்துள்ளது. அங்கு சுமார் 2,500 இந்திய மாணவர்கள் சிக்கியுள்ளனர். கடும் தாக்குதல் நடந்து வரும் நிலையில் அவர்கள் வெளியேற முடியாத சூழல் உள்ளது.
உக்ரைனின் கீவ் நகரில் தங்கியுள்ள மாணவர்கள் உட்பட அனைத்து இந்தியர்களும் இன்று அவசரமாக வெளியேறுமாறு அங்குள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இந்தநிலையில் ரஷ்யப் படைகளின் கடும் குண்டுவீச்சு தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் இன்று கொல்லப்பட்டார்.
இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறுகையில் ‘‘ உக்ரைனின் கார்கிவ் நகரில் இன்று காலை இந்திய மாணவர் ஒருவர் குண்டுவீச்சு தாக்குதலில் உயிரிழந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் உறுதிப்படுத்துகிறோம். அவரது குடும்பத்தினருடன் அமைச்சகம் தொடர்பில் உள்ளது. குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்’’ எனக் கூறியிருந்தார்.
இந்தநிலையில் பலியான இந்திய மாணவர் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
கர்நாடக மாநிலம் ஹாவேரியைச் சேர்ந்த நவீன் சேகரப்பா (வயது 21) என்ற இறுதியாண்டு மருத்துவ மாணவர் அவர். நவீன் சேகரப்பா ஒரு மளிகைக் கடைக்கு வெளியே நின்று கொண்டிருந்தபோது அவர் குண்டு வீச்சில் தாக்கப்பட்டார். கார்கிவ் நகரில் உள்ள மாணவர் ஒருங்கிணைப்பாளரான பூஜா பிரஹராஜ் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
‘‘நவீன் அங்கு ஆளுநர் மாளிகைக்கு அருகில் வசித்து வந்தார். மளிகை கடையில் தயார் நிலை உணவு பொருட்கள் வாங்க வரிசையில் நின்று கொண்டிருந்தார். திடீரென வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆளுநர் மாளிகையை தாக்கும் முனைப்புடன் இந்த குண்டு வெடிப்பு நடந்துள்ளது. இதில் அவர் கொல்லப்பட்டார்’’ என்று பிரஹராஜ் கூறினார்.
இதனை கர்நாடக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையரும், கர்நாடகாவின் நோடல் அதிகாரியுமான மனோஜ் ராஜன் உறுதிப்படுத்தியுள்ளார்.