கீவ்: உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் நகரில் குடியிருப்புப் பகுதிகள் மீது ரஷ்யா கொத்துக் குண்டுவீசி தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அங்கு இந்திய மாணவர்கள் 2,500 பேர் சிக்கியுள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட பல்வேறு பகுதிகளில் இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது.
போர் சூழலுக்கு நடுவே பெலாரஸ் நாட்டின் எல்லைப் பகுதியான கோமெல் நகரில் ரஷ்யா, உக்ரைன் பிரதிநிதிகள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். 3 மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்தநிலையில் உக்ரைன் மீது ரஷ்யா 6-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. ராணுவ நிலைகள் மட்டுமின்றி பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளிலும் ரஷ்யா தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் அரசு குற்றம் சாட்டியுள்ளது.
போர் பீதியால் உக்ரைனில் இருந்து பெண்கள், குழந்தைகள் உள்பட 5 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறி உள்ளதாக தெரிகிறது. இதுவரை 14 குழந்தைகள் உட்பட 350-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கீவ் நகரில் குடியிருப்புப் பகுதிகள் மீது ரஷ்ய விமானப்படை கொத்துக் குண்டு வீச்சு நடத்தி வருகிறது. உக்ரைனின் வடகிழக்கில் அமைந்துள்ள கார்கீவ் நகரத்தை ரஷ்யப் படைகள் தொடர்ச்சியாக பீரங்கி, ஏவுகணை மற்றும் வான்வழி குண்டுவீச்சி தாக்கி வருகிறது. இதனால் கார்கீவ் நிலைமை குறித்த அச்சம் அதிகரித்துள்ளது.
கார்கீவ் மட்டுமின்றி கீவ் ஆகிய நகரங்களை கடுமையாக தாக்கி அழிக்கும் அளவுக்கும் ரஷ்ய படைகளுக்கு வலிமை உள்ளது. எனினும் உக்ரைன் நகரங்களின் தெருக்களில் கொரில்லா போர் வெடித்துள்ளது. இதனால் கடுமையான உக்ரேனிய எதிர்ப்பால் ரஷ்யப்படை நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதனால் கொத்து குண்டு தாக்குதலை ரஷ்யப்படை தீவிரப்படுத்தியுள்ளது.
இதனிடையே கார்கீவ் நகரில் ஏறக்குறைய 2500 இந்திய மாணவர்கள் சிக்கியுள்ளனர். இது மத்திய அரசின் கவலையை அதிகப்படுத்தியுள்ளது. மத்திய அரசு நான்கு மூத்த அமைச்சர்களை உக்ரைன் எல்லையில் உள்ள நாடுகளில் இருந்து மாணவர்களை அழைத்து வரும் பணிக்கு நியமித்துள்ளது.
அத்துடன் ஐரோப்பாவில் உள்ள அனைத்து இந்திய தூதரகங்களிலிருந்தும் இந்திய தூதர்களும் அழுத்தம் கொடுத்து மற்ற நாடுகளின் உதவியை பெற்று வருகின்றனர்