2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலை குறிவைத்து ஒவ்வொரு கட்சியும் காய் நகர்த்தி வருகின்றன. தொடர்ந்து இரு முறை ஆட்சியைப் பிடித்த பாஜகவை வீழ்த்த எதிர்கட்சிகள் வியூகம் அமைத்து வருகின்றன. பாஜகவும் வேண்டாம், காங்கிரஸும் வேண்டாம் பிராந்திய கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சியை கைப்பற்றுவோம் என மம்தா பான்ர்ஜி, சந்திரசேகரராவ் உள்ளிட்டவர்கள் கூறிவருகின்றனர்.
காங்கிரஸை உள்ளடக்கிய பிராந்திய கட்சிகளின் கூட்டணிதான் வெற்றியைக் கொடுக்கும் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரை கூறிவருகின்றனர்.
இந்த விவாதத்தில் பிரசாந்த் கிஷோரின் பெயர் அதிகமாக அடிபடுகிறது. மம்தா பானர்ஜிக்காக தேர்தல் வியூகங்களை வகுத்து வருபவர், மக்களவைத் தேர்தல் நிலைப்பாட்டிலும் மம்தாவின் பேச்சையே பிரதிபலிப்பதாக கூறப்படுகிறது. இந்த சூழலில்
தெலங்கானா
முதல்வர் சந்திரசேகரராவை
பிரசாந்த் கிஷோர்
சந்தித்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து விசாரிக்கையில் மக்களவைத் தேர்தலுக்கான சந்திப்பு இது அல்ல, தெலங்கானாவில் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான சந்திப்பு என்கிறார்கள். மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் இருக்கும் சந்திரசேகர் ராவ்வின் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி, அதற்காக பிரசாந்த் கிஷோரின்
ஐபேக்
வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளதாம்.
இருவரும் இந்த சந்திப்பு குறித்து வெளிப்படையாக பேசவில்லை. ஆனால் இருவரின் சந்திப்பை சில தெலுங்கு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. எந்த முறையான ஒப்பந்தங்கள் எதுவும் கையெழுத்தாகவில்லை என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.