அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம் மார்ச் 3ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தது. இதனிடையே, ஜெயக்குமார் கைதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக குற்றம்சாட்டி திமுகவைச் சேர்ந்த நரேஷ்குமார் என்பவரை தாக்கி, அரைநிர்வாணமாக்கி இழுத்துச் சென்றதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ஜெயக்குமாரின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதைத் தொடர்ந்து, ஜெயக்குமார் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், “என்மீது புகார் அளித்தவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார். அவரது உடலில் காயங்கள் எதுவும் இல்லை. எனவே, என் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்தது தவறானது. நரேஷ்குமாரின் மருத்துவ அறிக்கையைிலும் அவருக்கு காயங்கள் எதுவும் இல்லை என குறிப்பிட்டப்பட்டுள்ளது. அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது. எனவே, எனக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமீன் மனு தொடர்பாக, அவருடைய வழக்கறிஞர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயகதீஷ் சந்திரா முன்பு ஆஜராகி இந்த ஜாமீன் மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என முறையிட்டனர். ஆனால், ஜெயக்குமாரின் ஜாமீன் மனுவை அவசர வழக்காக விசாரிக்க மறுத்த நீதிபதி, ஜெயக்குமாரின் ஜாமீன் மனுவை வியாழக்கிழமை (மார்ச் 3) எடுத்துக்கொள்வதாகத் தெரிவித்தார்.
இதனிடையே, ஜெயக்குமார் கைதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு கைதுக்கு கண்டனம் தெரிவித்தும் அவருக்கு ஜாமீன் வழங்க வலியுறுத்தியும் அவர் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி திங்கள்கிழமை தமிழகத்தில் பல்வேறு மாவட்ட தலைநகரங்களில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சேலத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மீது சேலம் நகரப் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சட்டவிரோதமாக கூடுதல், ரோட்டை மறித்தல், கொரோனா நோய் பரப்புதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர்கள் செம்மலை, மாவட்ட செயலாளர் வெங்கடாசலம், எம்எல்ஏக்கள் பாலசுப்பிரமணியம், ராஜமுத்து, சுந்தர்ராஜன், சித்ரா, ஜெய்சங்கர், நல்லதம்பி உள்பட நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சி.வி.சண்முகம் பேசுகையில், “ஆட்சி பொறுப்பிற்கு வந்த மு.க. ஸ்டாலின் நாட்டு மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகளை மறந்துவிட்டு அதிமுகவை எப்படி அழிப்பது என 24 மணி நேரமும் சிந்தித்து கொண்டிருக்கிறார்.” என்று கூறினார். இதைத்தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“