த. வளவன்
பாஜகவின் கோட்டையாக கருதப்படும் நாகர்கோவில் மாநகராட்சியை திமுக கைப்பற்றி உள்ளது. இதனால் நாகர்கோவிலின் முதல் மாநகராட்சி மேயர் திமுக மேயர் என்பது உறுதி படுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜனை வீழ்த்தி பாஜக மூத்த தலைவர் எம்ஆர்.காந்தி வெற்றி பெற்றது அரசியல் அதிசயமாக பார்க்கப்பட்டது. அதே அரசியல் அதிசயம் மீண்டும் நடக்க நாகர்கோவில் மாநகராட்சியில் வாய்ப்பு இருப்பதாகவும் சொல்கின்றனர் குமரி மாவட்ட அரசியல் தெரிந்தவர்கள்.
கடந்த 2019 ல் நாகர்கோவில் நகராட்சி மாநகராட்சியாக உருவாக்கப்பட்டது. அதற்கு முன் இரண்டு முறை நாகர்கோவில் நகராட்சியை பாஜகதான் கைப்பற்றியது. இதற்கு முக்கிய காரணம் இந்துத்வா உணர்வுகளை தட்டி எழுப்பிய ஆர்எஸ்எஸ் குமரி மாவட்டத்தில் மிக வலுவாக இருந்தது தான். இதற்கு அடித்தளமிட்டவர் தாணுலிங்க நாடார் எம் பி. தொடக்கத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் எம்பி யாக அறியப்பட்ட தாணுலிங்கம் காலப்போக்கில் மார்ஷல் நேசமணியின் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்து திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தமிழ்ப் பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க தீவிரமாக போராடினார். எண்பதுகளின் துவக்கத்தில் உயர்சாதி இந்துக்கள் அடக்குமுறையை எதிர்த்து ஏராளமான இந்துக்கள் பிற மதங்களுக்கு தாவியதை கடுமையாக எதிர்த்து இந்துத்வா உணர்வுக்குள் தள்ளப்பட்டார். இந்து முன்னணியில் சேர்ந்தார். தமிழ்நாட்டின் முதல் இந்து முன்னணி தலைவராக பதவி ஏற்றார்.
1983ல் மண்டைக்காடு கலவரம் ஏற்பட்ட போது இந்துக்களின் பிரதிநிதியாக அவரை மதித்து எம்ஜிஆர் பேச்சுவார்த்தை நடத்தினார். இவர் தூவிய இந்துத்வா உணர்வு பின்னாட்களில் பாரதிய ஜனதா கட்சியாக வளர்ச்சி பெற்றது என்று சொல்லப்படுவதுண்டு. காலப் போக்கில் தமிழகத்தின் முதல் கன்னி எம்எல்ஏவாக வேலாயுதனும், கன்னி எம்பியாக பொன். ராதாகிருஷ்ணனும் தேர்ந்தெடுக்கப்பட்டது தாணுலிங்கம் விதைத்த இந்துத்வா உணர்வு விருட்சமாக வளர்ந்து கிளைகளை பரப்பியதை தவிர வேறில்லை.
கன்னியாகுமரி எம் பி யாக பாஜகவும் மத்திய அமைச்சராகவும் பொன்.ராதாகிருஷ்ணன் இருந்த போது அங்கு பாஜக மிக வலிமையாக இருந்தது. தமிழகத்திற்கு பாஜக பயன்படுத்தும் நுழைவாயிலாக நாகர்கோவில் பயன்படுத்தப்பட்டது. நாகர்கோவில் வழியாக தென் மாவட்டங்களை கொஞ்சம் கொஞ்சமாக காலூன்ற பாஜக திட்டமிட்டு வந்தது. இப்படிப்பட்ட நேரத்தில்தான் சமீபத்தில் அரியலூர் மாணவி மரணம், மத மாற்ற புகார், ஹிஜாப் சர்ச்சை என்று பல விஷயங்களை பாஜக இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பிரச்சாரம் செய்தது. ஆர்எஸ்எஸ் வலுவாக இருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜகவிற்கு இது பெரிய உதவியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டது. ஆனால் பாஜக கொஞ்சமும் எதிர்பார்க்காத வகையில் இருந்த இடத்தையும் இழந்துவிட்டு மோசமான தோல்வியை தழுவ காரணம் இங்கு இருந்த சிறுபான்மையினர் வாக்குகள் மொத்தமாக பாஜகவிற்கு எதிராக திரும்பியதே.
அதாவது பாஜகவின் ஹிஜாப் மற்றும் மதமாற்ற வியூகம் அக்கட்சிக்கு எதிரான விளைவுகளை ஏற்படுத்தியது. இதையே தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தின. இந்த முறை மாநகராட்சியான நாகர்கோவிலில் உள்ள 52 வார்டுகளில் 25ஐ திமுக தனியாக கைப்பற்றி இருப்பது உண்மையில் சாதனை தான். காங்கிரஸ் 7 வார்டுகளில் வெற்றி பெற்று திமுக கூட்டணிக்கு மேலும் வலு சேர்த்துள்ளது.
இதற்கு முன் நாகர்கோவில் நகராட்சியை 2 முறை கைப்பற்றிய பாஜக இப்போது நாகர்கோவில் மாநகராட்சியான பின் சந்தித்த முதல் தேர்தலில் படு தோல்வியை தழுவியுள்ளது. இங்கு இருந்த 52 நகராட்சி வார்டுகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு அப்படியே மாநகராட்சி வார்டுகளாக மாற்றப்பட்டன. பெரிதாக வார்டுகளில் மாற்றம் எதுவுமில்லை என்றாலும் இங்கு பாஜக தோல்வி அடைந்து திமுக வென்றுள்ளது மட்டுமே நமது கண்களுக்கு தெரிகிறது. நாகர்கோவில் மாநகராட்சி தேர்தலில் பாஜக 11 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது மக்கள் மன நிலையில் ஏற்பட்ட மாற்றத்தை காட்டுகிறது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். அதிமுக 7 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் நாகர்கோவில் முதல் மேயர் பதவியை திமுக கைப்பற்றும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. இங்கு பாஜக சார்பாக மீனாதேவ் மேயராக முன்னிறுத்த படுவார் என்று எதிர்பார்த்த நிலையில் பாஜக படு தோல்வியைச் சந்தித்திருக்கிறது.
அமைச்சர் மனோ தங்கராஜ் தொடக்கத்தில் இருந்து நாகர்கோவில் நகர செயலாளரும் அரசு வக்கீலாக இருப்பவருமான மகேஷை மேயர் பதவிக்கு முன்னிறுத்தி வருகிறார்.. மேற்கு மாவட்ட செயலாளர், மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மனோதங்கராஜூக்கு நெருக்கமான மகேஷ் கிழக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் எதிர்ப்பையும் மீறி தனியாளாக தீவிர தேர்தல் பணிகளை செய்ய அவரை உற்சாகமூட்டியது மனோதங்கராஜ் என சொல்லப் படுகிறது. திமுக மேலிட தலைமை இதற்காகவே அனைவரிடமும் ஒத்துப் போதும் தலைமை நிலைய செயலாளர் பூச்சி. முருகனை தேர்தல் முடியும் வரை நாகர்கோவிலேயே தங்கியிருக்க செய்து திமுக பிரமுகர்களின் ஈகோ மோதலையும் சரி செய்த பின்னரே திமுகவால் வெற்றிக் கனியாய் எளிதாக சுவைக்க முடிந்ததாக சொல்கின்றனர் திமுகவினர். இவரது மேயர் சாய்ஸ் யாருக்கு தெரியாதென நிலையில் கிழக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் ஒரு தகவல் உண்டு.
முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளருமான சுரேஷ் ராஜன் மேயர் பதவிக்கு நகர செயலாளர் மகேஷ் பெயரை முன்மொழியாத காரணம் தலைமையுடன் நெருக்கமாக இருக்கும் மகேசால் எந்த நேரமும் தனது பதவிக்கு ஆபத்து வரலாம் என்பதே. ஒரு காலத்தில் தனது காலடியில் கிடந்த மகேஷ் இப்போது தனக்கு எதிராக செயற்படுவதாக நினைக்கிறார் சுரேஷ் ராஜன்.
இதற்கு இரண்டு பல்வேறு விதமான காரணங்கள் உள்ளன. ஒன்று சிறந்த மாநகரச் செயலாளர் விருதை முதல்வர் ஸ்டாலினிடம் பெற்றது. இரண்டாவது பொருளாதார ரீதியாக மகேஷ் வேகமாக வளர்ந்தது. மூன்றாவது நன்றாக செயல்படுகிறீர்கள், கட்சியை நன்றாக வளர்த்து உள்ளீர்கள் என்று ஸ்டாலின் இவரைப் பாராட்டியது. இவை அனைத்தும் சுரேஷுராஜனுக்கு மேலும் பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் தான் 3 முறை கவுன்சிலராக இருந்த ஜெயசிங் மனைவி மேரி ஜெனிட்டா, செல்வந்தரும் முன்னாள் நாகர்கோவில் நகராட்சி துணை சேர்மனுமான சைமன் ராஜ் மனைவி லீலா பாய், இன்னொரு வார்டில் ஜெயித்த அவரது மருமகள் ஜோனா கிரிஸ்டி என என நான்கு பேர் கொண்ட லிஸ்ட்- அவுட்டை தலைமையிடம் சமர்ப்பித்துள்ளாராம் சுரேஷ்ராஜன். கன்னியாகுமரி தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் திமுக எட்டிப் பிடிக்க முடியாத உயரத்தை பிடித்து இருந்தாலும் குமரியில் இன்னமும் ஒரு கட்சியை பார்த்து மிரள்வது என்றால் அது பாஜகவாகத் தான் இருக்க முடியும்.
இந்த நிலையில் மேயர் தேர்தலில் பாஜக சார்பில் முன்னாள் சேர்மன் மீனா தேவ் களம் இறங்குவார் என அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது பாஜக. மாநகராட்சியில் திமுகவுக்கு தனிப்பட்ட முறையில் அறுதி பெரும்பான்மை கிடைத்திருக்கும் நிலையில் பாஜகவுக்கு எப்படி போட்டியிடும் துணிச்சல் வந்தது என்பது தான் குமரி மாவட்ட அரசியலில் இப்போது பெரும் பேச்சாக இருக்கிறது. வரும் நான்காம் தேதி எதுவும் நடக்கும் என்பதால் திகிலில் இருக்கின்றனர் திமுகவினர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“