தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆரியங்காவு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர், இருபது வயது நிரம்பிய ஒரு பட்டதாரி பெண். படிப்பை நிறுத்திவிட்டு தற்போது வீட்டில் இருக்கும் அவர், வீட்டில் இருந்தபடியே பீடி சுற்றும் தொழில் செய்து வருகிறார்.
அந்தப் பெண்ணுக்கும் அவர் சமூகத்தைச் சேர்ந்த ஒரு இளைஞருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அதுவே காதலாக மலர்ந்துள்ளது. இருவருக்கும் இடையேயான காதல் விவகாரம் பெண்ணின் தந்தையான வேலுச்சாமி என்பவரின் காதுகளை எட்டியதும் அவர் ஆத்திரம் அடைந்துள்ளார்.
வீட்டில் இருந்த மகளிடம் காதல் விவகாரம் பற்றிப் பேசியிருக்கிறார். இனிமேல் அது போன்ற எந்தத் தகவலும் தன் காதுக்கு வரக்கூடாது என்று எச்சரித்திருக்கிறார். அப்போது மகள் எதிர்த்துப் பேசியிருக்கிறார். தான் 20 வயது நிரம்பியவள் என்பதால் தன்னால் எந்த முடிவையும் எடுக்க முடியும் எனப் பேசிய அவர், தந்தை மீது போலீஸில் புகார் செய்வதாகத் தெரிவித்திருக்கிறார்.
ஏற்கெனவே ஆத்திரத்தில் இருந்த வேலுச்சாமி மகளின் பேச்சால் மேலும் கோபம் அடைந்துள்ளார். அதனால் அரிவாளை எடுத்து தன் மகளை வெட்டியிருக்கிறார். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காதல் விவகாரம் தொடர்பாக நடந்த இந்த கொலை முயற்சி குறித்து பாவூர்சத்திரம் போலீஸார் வேலுசாமி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.