மக்கள் நீதி மய்யம் கட்சியின் நம்மவர் தொழிற்சங்கப் பேரவை தலைவரான சு.ஆ.பொன்னுசாமி இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பில், “என் மீது மிகுந்த நம்பிக்கை கொண்ட நட்புகளுக்கும், மய்ய உறவுகளுக்கும், தொழிற்சங்க நிர்வாகிகளுக்கும் வணக்கம்.
நேற்று (27.02.2022) ஞாயிற்றுக்கிழமை காலை மக்கள் நீதி மய்யம் தொழிலாளர்கள் அணி மாநிலச் செயலாளர் பொறுப்பில் இருந்து நான் விடுவிக்கப்பட்ட செய்தியை அனைவரும் நன்கறிவீர்கள்.
இந்நிலையில் கட்சியின் உள்சுற்றறிக்கையாக அனுப்பப்பட்ட அந்த தகவல் ஊடகங்களில் வெளியாகி பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்ததால் இந்த விளக்கத்தை கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணி செயலாளராகவும், பின்னர் தலைவர் கேட்டுக் கொண்டதின் அடிப்படையில் தொழிற்சங்க பேரவை பதிவு செய்வதற்கான பணிகளை முன்னெடுத்துச் சென்று கட்சியின் தலைமை தொழிற்சங்கமான நம்மவர் தொழிற்சங்கப் பேரவையின் மாநில தலைவர் என இரண்டு பொறுப்புகளை கவனித்து வந்தேன்.
தொழிற்சங்க பொறுப்பு என்பது மிகப்பெரிய பணி என்பதால் அதனையும், தொழிலாளர் நல அணி மாநில செயலாளர் பொறுப்பையும் ஒரு சேர கவனிக்க இயலாத காரணத்தால் தொழிலாளர் நல அணி மாநில செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்க வேண்டும் என 2021 செப்டம்பரிலேயே தலைவர் நம்மவர் அவர்களுக்கும் கோரிக்கை விடுத்திருந்தேன்.
அவ்வாறு கடந்த ஆறு மாதங்களுக்கு முன் நான் விடுத்திருந்த கோரிக்கை அடிப்படையில் நேற்று அப்பொறுப்பில் இருந்து நான் விடுவிக்கப்பட்ட நிலையில் ஒரு சில ஊடகங்கள் தங்களின் டிஆர்பி பசிக்காக என் நேர்மையை சந்தேகிக்கும் வகையில் தவறான அவதூறு கருத்துக்களை பரப்பி வருவதோடு, தேர்தல் தோல்வி காரணமாகவே நான் ராஜினாமா செய்ததாக கண், காது, மூக்கு வைத்து கண்டதையும் எழுதி வருகின்றன. எனவே ஊடகங்கள் மற்றும் ஒரு சில தீயசக்திகள் பரப்பும் தவறான எந்த தகவல்களையும் எவரும் நம்ப வேண்டாம்.
மேலும் தேர்தல் தோல்வியால் துவண்டு மாற்று கட்சிகளுக்கு தாவும் ஈனப்பிறவியோ அல்லது இக்கட்சி இல்லை என்றால் இன்னொரு கட்சி, அந்த கட்சி இல்லை என்றால் மற்றொரு கட்சி என கட்சிக்கு கட்சி தாவும் அரசியல் மந்தியோ (குரங்கு), அரசியல் வியாதியோ அல்ல நான்.
அதே நேரம் நான் வருமானத்திற்காக பால் வியாபாரம் செய்கின்ற பால் முகவர் தானே தவிர, பணத்திற்காக தன்மானத்தை விற்று பிழைப்பு நடத்தும் அரசியல் வியாபாரியும் அல்ல என்பதையும் இந்நேரத்தில் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன்”
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் சு.ஆ.பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.