புதுடெல்லி: “நிலைக்குழுக் கூட்டத்திற்கான அழைப்பு குறித்த நேரத்தில் அனுப்பவில்லை” என திமுக எம்.பி. அப்துல்லா அளித்த புகார் மீது மக்களவை சபாநாயகர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
நாடாளுமன்ற எம்.பி.க்களின் நிலைக்குழுவின் ஒரு கூட்டத்திற்கு குறித்த நேரத்தில் அழைப்பு அனுப்பப்படவில்லை எனப் புகார் எழுந்துள்ளது. மாநிலங்களவையின் திமுக எம்.பி.யான எம்.முகம்மது அப்துல்லாவின் புகார் மீதான விசாரணைக்கு மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் மொத்தம் 24 உள்ளன. இதில், 16 மக்களவையின் நிர்வாகத்திலும், மீதம் உள்ள எட்டு நிலைக்குழுக்கள் மாநிலங்களவையின் கீழும் இயங்குகின்றன. இந்த இரண்டு குழுக்களிலும் மாநிலங்களவை மற்றும் மக்களவை ஆகியவற்றின் எம்.பி.க்கள் உறுப்பினர்களாக அமர்த்தப்படுவது வழக்கம்.
இந்த வகையில், நாடாளுமன்ற மாநிலங்களவையின் புதிய திமுக எம்.பியான எம்.முகம்மது அப்துல்லா, மக்களவை நிர்வாகத்தின் கீழுள்ள சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் நிலைக்குழுவின் உறுப்பினராகவும் அமர்த்தப்பட்டுள்ளார். இந்த ஆண்டிற்கான இக்குழுவின் முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி 17-இல் நடைபெற்றது. இதன் மீதான அழைப்பு திமுக எம்.பி. அப்துல்லாவிற்கு குறித்த நேரத்தில் கிடைக்கவில்லை. இதனால், அக்குழுவிற்கு செல்ல முடியாதமையால் அவர் நிலைக்குழுவின் தலைவரான மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் பிப்ரவரி 16-இல் புகார் அளித்துள்ளார்.
தற்போது, ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் உள்ள மாநிலங்களவை எம்.பி.யான அப்துல்லா அனுப்பிய புகார் நகலில் ”பிப்ரவரி 11-இல் தயாரான அழைப்பு பிப்ரவரி 15-இல் அனுப்பப்பட்டது. பிப்ரவரி 17-இல் நடைபெறும் கூட்டத்திற்கு முறைப்படி 24 மணி நேரம் முன்பாக அனுப்பப்படவில்லை. இதனால், என்னைப் போல் பல உறுப்பினர்களுக்கு அக்கூட்டத்திற்கு வர சிக்கல் ஏற்பட்டது. இதன் மீது அக்குழுவின் வாட்ஸ் அப் குழுவில் நான் குறிப்பிட்டபோது, உறுப்பினர்களின் இணையதளப் பக்கங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுவிட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், உடனடியாக நான் அதை சோதித்து பார்த்ததில் அவ்வாறும் செய்யப்படவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கோரி எழுதப்பட்டக் கடிதத்தின் மீது சபாநாயகர் ஒம் பிர்லா விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இதுபோன்ற நிலைக்குழுக் கூட்டங்களில் நாடாளுமன்ற அலுவலங்களால், தமிழக எம்.பிக்கள் புறக்கணிக்கப்படுவதாக ஒரு புகார் நிலவுகிறது. கடந்த ஆட்சியின் நிலைக்குழுக் கூட்டங்களில் இந்தி மொழி அறியாத உறுப்பினர்களுக்கு உதவ மொழிபெயர்ப்பாளர்கள் உகந்தபடி செய்யப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
எனினும், இதன் மீது முதன்முறையாக தமிழகத்தின் திமுக எம்.பி.அப்துல்லா சபாநாயகர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் கருதப்படுகிறது. எதிர்காலத்தில் நிலைக்குழுக்களின் கூட்டங்களில் எந்தக் கட்சி எம்.பிக்கும் இதுபோன்ற பிரச்சினைகள் நேராவண்ணம் நடவடிக்கை எடுக்கும்படியும் மாநிலங்களவை எம்.பி அப்துல்லா தனது புகாரில் வலியுறுத்தி உள்ளார்.
திமுகவின் ஐ.டி பிரிவின் துணைச்செயலாளராக வகிக்கும் எம்.பி அப்துல்லா, தனது புகாருக்கான ஆதாரங்களாக கைப்பேசி, கணினியின் திரைகளின் படங்களையும் இணைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.